11.1.2025 சனிக்கிழமை
கூடாரைவல்லி
இன்று இரண்டு சிறப்பு. ஒன்று சனிக்கிழமை பிரதோஷம். கூடாரை வல்லி உற்சவம். சைவ, வைணவ ஆலயங்களில் இன்று அதிக விசேஷம்.திருப்பாவையின் 27வது பாசுரம், ‘‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்ற பாசுரம். இந்த பாசுரத்தையே ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள். கூடாரை வல்லித் திருநாளில், ஆண்டாளிடம் பிரார்த்தனையை வைத்தால், கல்யாண யோகம் கைகூடி வரும். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தரு ளுவாள்.சரி, அது என்ன கூடாரைவல்லி? திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள் என்று இதைச் சொல்லுவார்கள். காரணம், திருப்பாவை ஆரம்பிக்கும்போது ஆண்டாள்,” நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்று பலவிதமான பொருட்களை இந்த விரதத்தில் பயன்படுத்துவதில்லை என்று சங்கல்பித்துக் கொள்ளுகின்றாள். அதைப் போலவே, ‘‘மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்” என்று, அலங்காரம் செய்வதும் இல்லை என்று ஆரம்பத்திலேயே சொன்னாள்.
இந்தப் பாசுரத்தில், ‘‘மூடநெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர்வோம்’’ என்று எல்லோரையும் வைத்துக்கொண்டு, இன்று நாங்கள் சர்க்கரைப் பொங்கல் செய்து சாப்பிடுவோம் என்று சொல்வதிலிருந்து., இது நோன்பு நிறைவேறிய நாளாகக் கருதி கொண்டாடுவார்கள். குறையொன்றுமில்லாத கோவிந்தனை வழிபடுகின்ற பொழுது ஒவ்வொருவர் மனக்குறையும் தீர்ந்துவிடும் என்பதால், அன்று புத்தாடை அணிந்து, ஆண்டாள் புடவை எடுத்து வைத்து, ஆண் டாள் படத்துக்கு பூமாலை சூட்டி, கீழ்க்கண்டவாறு திருநாமத்தைச் சொல்லி வாழ்த்தி வழங்குவார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தோடு காட்சி தருவார். ஒருமுறை ராமா னுஜர் ஆண்டாள் கோரிக்கையை நிறைவேற்றுகின்ற வண்ணம், நூறு அண்டா வெண்ணையும் நூறு அண்டா அக்கார அடிசிலும், மதுரை திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்ப்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரை வல்லி அன்று 108 பாத்திரத்தில் வெண்ணெயும் அக்கார அடிசிலும் நிவேதனம் ஆகும். நாம் அன்று வெண்ணெயும் அக்கார அடிசிலும் (பாலில் நெய் விட்டு செய்த சர்க்கரை பொங்கல்) வைத்து ஆண்டாளை வணங்க நம்முடைய மனோரதம் நிறைவேறும். பெண் களுக்கு நல்ல வரன் அமையும். கூடாரை வல்லி நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலை அணிவித்து வணங்குவதன் மூலமாக சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.
13.1.2025 திங்கட்கிழமை
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், எல்லா சிவன் கோயில் களிலும் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆனிமாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோயில்களிலும் இத்தகைய சிறப்பைக் காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.நேற்று தேர் உற்சவம் முடிந்து, அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்க இருக்கின்றன. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், சித்சபா பிரவேசமும் நடக்க இருக்கிறது.
13.1.2025 – திங்கட்கிழமை
போகி பண்டிகை
போக்கி பண்டிகை என்பதே போகிப் பண்டிகை ஆகியது. போகி என்பது இந்திரன் பெயர்.அவருக்கான பண்டிகை என்றும் சொல்லலாம்.இந்த தினத்தில் எல்லா வைணவ கோயில்களிலும் திருப்பாவை முடிந்து ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். அந்தத் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது சிறப்பு. அதேநேரத்தில் இது போகி என்பதால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுபோல வீடுகளை தூய்மையாக்கும் பணி நடைபெறும். தேவையற்ற பொருளை நெருப்பில் எரித்து விடுவர்.கடந்த கால துன்பகரமான எண்ணங்களை எல்லாம் நெருப்பிலிட்டு பொசுக்கி புத்துணர்ச்சியுடன் தை மாதத்தை ஆரம்பிக்கும் மார்கழியின் கடைசி நாள் போகி.போகிப்பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக்கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப் பொங்கல்’ வைக்கப் படும்.. வீட்டின் முன் வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங் குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.பிறகு அனைவரும் உண்டுகளிக்க வேண்டும்.
13.1.2025 – திங்கட்கிழமை
சடைய நாயனார் குரு பூஜை
“என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பட்ட சடைய நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். பண்ருட்டி அருகே திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை (சுந்தரர்) மகவாகப் பெற்றுத்தந்த பெருமை உடையவர். இன்று மார்கழித் திருவாதிரை.
14.1.2025 – செவ்வாய்க்கிழமை
மாதப் பிறப்பு – மகர சங்கராந்தி தை பொங்கல்
‘‘மார்கழிக்குப் பெண்ணாக
மாசிக்குத் தாயாக
பேர்கொழிக்க வந்த
பெட்டகமே”
– என்று தை மகளை வர்ணிக்கிறார் கவியரசர். அந்தத் தைமகளின் வருகையைத்தான் தைத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். உத்தராயண புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு. பொங்கல் பண்டிகை. சூரிய நாராயணனுக்கு பொங்கலிட்டு வணங்க வேண்டும். காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை மகர லக்கினம் பொங்கல் வைக்க உகந்த நேரம்.உத்தராயண புண்ணிய காலமான தைப்பொங்கல் அன்று பாலில் புத்தரிசி பொங்கல் போட்டு சூரிய பகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். இதன் மூலமாக நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் மனஅமைதியும் கிடைக்கும்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து , வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.மண் பாண்டத்தின் பெருமையைச் சொல்வதற்காகவே அறுவடைத் திருநாளில் , புது மண் பானை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமமிட்டு, பாத்திரத்தின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கிழங்கு, இஞ்சி உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்கரித்து, பூஜையறையில் வைத்து, விளக்கேற்றி வேண்டிக் கொள்ள வேண்டும்.முற்றத்தில் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பால் பொங்கும் போது மணியோசை எழுப்பி பொங்கலோ பொங்கல் என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் உண்டு.
15.1.2025- புதன்கிழமை
மாட்டுப் பொங்கல்
காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக் குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய்!”
இன்று உழவர்களுக்கான திருநாள். அவசியம் கோ பூஜை செய்யவும். உழவுத் தொழிலுக்கு உறு துணையாக விளங்கும் ஆவினத் திற்கு நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கல்நாளாகும். மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு உண்டு. மாட்டுப்பொங்கல் பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் சொல்வது உண்டு. மாடுகள் மற்றும் கன்றுகளின் தொழுவம் சுத்தம் செய்ய வேண்டும்.குரு ஓரையில் (காலை 8-9)அல்லது மாலை(3-4)மாடுகளுக்கு ஜலத்தில் வில்வ இலை, வெட்டிவேர், சிவப்பு பூசணி பூ, புஷ்பம், சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம் இவைகளை தண்ணீரில் போட்டு, அதனுடன் பன்னீர் கலந்து குளிப்பாட்டி விட வேண்டும். மாடுகளை குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளில் வண்ணம் பூசி அலங்கரித்து, சலங்கை கட்டி விடுவார்கள். மேலும் அவற்றுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு உள்ளிட்டவற்றையும் அணிவித்து மாடுகளையும், கருவிகளையும் வழிபடுவார்கள்.‘‘பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். மாடுகளை மட்டுமின்றி உழவுக்கு உதவும் கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து மாடுகளோடு சேர்த்து அவற்றையும் வழிபடுவார்கள். மாடுகள் இல்லாத வர்கள் காமதேனு பூஜை செய்யலாம்.
16.1.2025 – வியாழக்கிழமை காணும் பொங்கல்
காணும் பொங்கல் பெரியவர்களைக் காணும் பொங்கல் என்று பொருள்படும் பண்டிகை. பொங்கல் கொண்டாட்டங் களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெற வேண்டும். இந்த நாளில் பலரும் பல விதமான உணவு வகைகள், பலகாரங்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, குடும்பமாக ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று, உல்லாசமாகவும் உற்சாகமாகவும் பொழுதை கழித்து விட்டு வருவார்கள். நீர் நிலைகளை சென்று காண்பது காணும் பொங்கல் என்றும்,சொல்வர். கிராமங்களில் கன்னிப் பொங்கல் என்ற பெயரிலேயே பல இடங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி, ஆடிப்பாடி இந்நாளில் மகிழ்வதுண்டு. அவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு வந்த பலவிதமான பொருட்களை கொண்டு பொதுவாக ஒரு இடத்தில் ஒரே பொங்கலாக வைத்து, பகிர்ந்து உண்டு மகிழ்வது உண்டு. வீட்டில் திருமண வயதில் இருக்கும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என வீட்டில் பொங்கல் வைத்து இந்த நாளில் குலதெய்வத்திற்கு படைத்து வழிபடுவார்கள்.
11-1-2025 சனிக்கிழமை பிரதோஷம்.
13-1-2025 திங்கள் ஆண்டாள் திருக்கல்யாணம்.
15-1-2025 புதன் பூசம்.
17-1-2025 வெள்ளி திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.