9.3.2025 – ஞாயிறு
குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்
ஆழ்வார்கள் பெருமாள் பக்தர்கள். பெருமாளைப் பாடியவர்கள். ஆனால் ஒரு ஆழ்வாருக்கு மட்டும் பெருமாள் என்கிற பெயரும் அவர் பாடிய நூலுக்கு பெருமாள் திருமொழி என்ற பெயரும் இருக்கிறது. அவர்தான் குலசேகர ஆழ்வார். அவரை குலசேகரப் பெருமாள் என்றும் அவர் பாடிய நூலை பெருமாள் திருமொழி என்றும் அழைக்கும் பெருமை பெற்றவர்.இவர் சேரநாட்டுத்திருவஞ்சிக் களத்தில் அரச குலத்தில் பெருமாளின் கௌத்துவ மணியின் அம்சமாகத் தோன்றியவர். இவர் அவதாரம் மாசியில் புனர்பூசம். இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும். அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும். இவர் ராமனுக்கு தாலாட்டு பாடியவர். திருமலை அப்பன் மீது இவர் ஒரு பதிகம் பாடி இருக்கிறார். அதில் ஒரு வரியில் “உன் கோயிலில் ஒரு படியாக இருந்து உன் பவளவாய் காண்பேனே’’ என்று பாடி இருக்கிறார். அது அப்படியே வைணவ மரபில் நடைமுறை ஆகியது. ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி” என்ற பெயரில் வழங்கப்படும் திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர் கட்டினார். இவருடைய வேறு பெயர்கள் இவர் பாடிய பெருமாள் திருமொழியின் பலச் சுருதியில் இருக்கிறது. கொல்லிக்காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன் என்று பல திருநாமங்கள் உண்டு. எத்தனை துயரம் இருந்தாலும், குடிமக்கள் அரசனை நோக்கி வாழ்வது போல், பெருமாளே நான் உன்னை நினைத்து வாழ்கிறேன்’’ என்று பாடிய பிரசித்தி பெற்ற பாசுரம் இது;
“மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டம்மா என்
பால் நோக்காயாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான் நோக்காது எத்துயரம்செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கிவாழுங்குடிபோன்றிருந்தேனே’’
9.3.2025 – ஞாயிறு
திருச்செந்தூர் சிவப்பு சாற்று விழா
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக பக்தர் களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். பிற முருகன் கோயில்கள் மலை மீது இருக்கும் போது கடற்கரை அருகில் உள்ளது இந்த ஆலயம். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். தற்போது மாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செய்து கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருச்செந்தூரில் முருகப் பெருமான் கோயிலில் ஆவணி, மாசி திருவிழா நாட்களில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளி அருள்பாலிப்பார். சிவப்பு சாத்தி சப்பரத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். இன்று சிவப்பு சாத்தி சப்பரத்தில் உலா வருகிறார்.
9.3.2025 முதல் 13.3.2025 வரை
திருமலை தெப்பம்
இன்று (9.3.2025) முதல் 5 நாட்கள் மாசி மாத தெப்ப உற்சவம் திருமலை ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடைபெறும். (இந்த ஆண்டு மார்ச் 9ம் தேதிமுதல் 13ம் தேதிவரை 5 நாட்கள்) முதல் நாள் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ராமச்சந்திர மூர்த்தி, இரண்டாம் நாள் ருக்மணி சமேத கிருஷ்ணசாமி, கடைசி மூன்று நாட்கள் மலையப்ப சுவாமி தேவி பூதேவி சமேதராக
தெப்பத்தில் பவனி வருவர்.
9.3.2025 – ஞாயிறு
காரமடையில் கருட சேவை
காரமடை அரங்கநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது. இக்கோயிலின் தலவிருட்சமாக காரை மரம் உள்ளது. இக்கோயிலில் மூலவராக உள்ள அரங்கநாதர் சதுர வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இங்கு மாசி மாதம் மாசிமகம் விசேஷம். 10 நாள் உற்சவம். 7வது நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. மாசி மாதம் மாசிமகம் 9வது நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இன்று கருட சேவை நடக்கிறது.
10.3.2025 – திங்கள் சர்வ ஏகாதசி
மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இன்று ரங்கத்தில் நம் பெருமாளுக்கு சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. காலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
12.3.2025 – புதன் மாசி மகம்
இந்த நாள் முருகப் பெருமானுக்கு உகந்த நாள். மாசி மக நாளில் சுவாமி மலையில் சிவபெருமானுக்கு முருகன் பிரணவ உபதேசம் செய்தார் என்று புராணம் சொல்லுகின்றது. இன்று முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் பெண்களுக்கு ஆண் சந்ததி விருத்தி உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. மாசி மகம் குருபகவானுக்கும் உகந்த நாள் அவருக்கு மஞ்சள் ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் உள்ள பாடல் பெற்றதலம். இங்கு சுயம்புவாகத் தோன்றிய மூலவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறிமாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் என அழைப்பார்கள். இங்குதான் இறைவன், திருநாவுக்கரசருக்கு திருவடி சூட்டினார். ஆதலால் சடாரி வழக்கம் இங்கு உள்ளது. அமர்நீதி நாயனாரை சிவன் இத்தலத்தில் ஆட்கொண்டார். குந்திதேவி தன் தோஷம் நீங்க இத்தலத்தில் நீராடினாள். அந்த நாள் மாசி மகம்.
12.3.2025 – புதன்
மணக்கால் நம்பி திருநட்சத்திரம்
நாதமுனி தொடக்கமாக இருக்கும் ஓராண் வழி ஆசார்யர்கள் வரிசையில் மூன்றாவதாக வீற்றிருப்பவர் மணக்கால் நம்பி. உய்யக் கொண்டாரின் பிரதான சீடர் மணற்கால் நம்பி இயற்பெயர் “ராமன்”. உய்யக்கொண்டாரின் மனைவி பரமபதிக்க, அவருடைய திருமாளிகை காரியமெல்லாம் மணற்கால் நம்பியே செய்துவந்தார். உய்யக் கொண்டாரின் இரண்டு சின்ன பெண் குழந்தைகளையும் இவரே பார்த்துக்கொண்டார். ஒரு நாள் அந்தக் குழந்தைகளை நீராட்டி அழைத்து வரும் வழியில் வாய்க்காலில் சேறாயிருப்பதைக் கண்டு அவர்களுடைய கால்கள் சேற்றில் படாமல் இருக்கத் தானே படியாய்க்கிடந்து, அவர்களை தன் முதுகிலே கால் வைத்துக் கடக்க செய்தார். தம்முடைய குழந்தை களில் கால் சுவடுகளை அவர் முதுகில் பார்த்த உய்யக்கொண்டார் அவருடைய ஆசாரிய அபிமானத்தைக் கண்டு வியந்து அவருக்கு மணற்கால் நம்பி என்று திருநாமம் சாத்தினார். அவர் திருநட்சத்திரம் இன்று.
14.3.2025 – வெள்ளி
திருக்கோட்டியூர் தெப்பம்
திருக்கோஷ்டியூர் ராமானுஜரின் ஆச்சார்யரான திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதரித்த திருத்தலம். ராமானுஜர், ஆசையுடையோர்க்கு எட்டெழுத்து மந்திர மகிமையையும் மந்திரத்தையும் எடுத்துரைத்த புண்ணிய பூமி. இங்குள்ள சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மக பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது.பிரமோற்சவத்தின் முக்கிய விழா தெப்ப உற்சவ விழா, இன்று நடக்கிறது. மாசி மக விழாவையொட்டி தினந்தோறும் இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 9ம் நாளில் காலை வெண்ணெய்த்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள் வார். 10-ம் திருநாளான இன்று காலையில் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், அதன் பின்னர் காலை பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக் கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று விழா நிறைவு பெறும். வெளியூர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோயில் தெப்பக்குளத்தில் சுற்றி தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வர்.
14.3.2025 – வெள்ளி
காரடையான் நோன்பு
இன்று (14-3-2025) காரடையான் நோன்பு விரதம். பூஜை செய்து சரடு கட்டிக்கொள்ள உகந்த நேரம் மாலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை. இனி இந்த விரதம் குறித்து சுருக்கமாகக் காண்போம். எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதி விரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும். சுமங்கலி பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மகத்தான விரத நாள்தான் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப் படுகிறது. இது சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. எந்தப் பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன் பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் காரடையான் நோன்பு விரதத்தின் நோக்கமாகும். கார அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக்கயிற்றை பெண்கள் கட்டிக்கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக்கொள்வார்கள். ‘மாசிக்கயிறு பாசி படியும்’ என்ற சொல்வடைக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை கடைபிடிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
8.3.2025 – சனி – திருக்கோட்டியூரில் பெருமாள் தோளுக்கினி யானில் பவனி.
10.3.2025 – திங்கள் – திருச்செந்தூர் பச்சை சாற்று விழா.
10.3.2025 – திங்கள் – காரமடை திருக்கல்யாணம்.
10.3.2025 – திங்கள் – இம்மையில் நன்மை தருவார் (மதுரை) திருக்கல்யாணம்.
11.3.2025 – செவ்வாய் – மகா பிரதோஷம்.
11.3.2025 – செவ்வாய் – குடந்தையில் சாரங்கபாணி தெப்பம்.
12.3.2025 – புதன் – நடராஜர் அபிஷேகம்.
12.3.2025 – புதன் – மாம்பலம் கோதண்டராமர் கருட சேவை.
12.3.2025 – புதன் – திருக்குறுங்குடி தெப்பம்.
13.3.2025 – வியாழன் – பௌர்ணமி, ஹோலிப் பண்டிகை, காமதகனம், திருச்செந்தூர் தெப்பம்.
14.3.2025 – வெள்ளி – லட்சுமி ஜெயந்தி.