திருமலை: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம், கோட்பார் ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே ரயில் சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு திருப்பதிக்கு இயக்கப்பட்டு, அங்கிருந்து மீண்டும் கோட்பார் ரயில் நிலையத்திற்கு இயங்கப்படுகிறது. அதன்படி, கோட்பார் ரயில் நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட ரயில் நேற்று அந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் எண் 1ல் வந்து நின்றது. தொடர்ந்து, பயணிகள் அனைவரும் இறங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் ரயிலின் ஏசி பெட்டியில் இருந்து கரும்புகை கிளம்பியது. மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றி மளமளவென அந்த பெட்டி எரிய தொடங்கியது.
இதனால் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். தீ வேகமாக பரவியதால் ரயிலில் பி6, பி7, எம்1 ஆகிய பெட்டிகள் தீயில் கருகின. ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.