ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். சீல் பிரிக்காமல் இருந்த 6 வாஷிங் மெஷின்களை சரக்கு ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் 6 வாஷிங் மெஷின்களில் பதுக்கி கடத்தப்பட இருந்த ரூ.1.30 கோடி பணம், 30 புதிய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு எலக்டானிக்ஸ் ஷோரூமிற்கு சொந்தமானது என தெரிய வந்தது. அதன் பிறகு போலீசார் அந்த கடை உரிமையாளரிடம் விசாரித்ததில் தசரா விற்பனையில் கிடைத்த பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய எடுத்து செல்வதாக எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் விளக்கம் அளித்தார். ஆனால் ரூ.1.30 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.