திருமலை: இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா ஆந்திர மாநிலம் விஜயவாடா இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடி ஏற்றினார்.
பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் இழந்த சுதந்திரத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மக்களுக்கு பயனுள்ள கொள்கைகளை உருவாக்கி வருகிறோம். மாநில நலனையும், வளர்ச்சியையும் இரு கண்களாகக் கொண்டு ஆட்சியைத் தொடங்கினோம். 100 நாள் திட்ட இலக்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து வருகிறோம். கடந்த அரசால் முடக்கப்பட்ட துறைகளை மீட்டெடுத்து வருகிறோம்.
வம்சதாரா, நாகாவலி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் பென்னா நதிகளை இணைப்பது அரசின் கொள்கை. விசாகப்பட்டினம், விஜயவாடாவில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.