சென்னை: விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை சென்னை காசிமேடு மீனவர்கள் மீட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற குணபாலசிங்கம், ராமசந்திரன், ஹேமஸ்ரீ, முஸ்தகின் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட காற்றின் வேகம் காரணமாக 4 இலங்கை மீனவர்கள் திசை திரும்பி காணாமல் போகினர்.
அப்போது அவ்வழியாக வந்த தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் பழுதடைந்த ஒரு படகில் இலங்கை மீனவர்கள் 4 தத்தளித்ததைப் பார்த்து, காசிமேடு மீனவர்கள் மீட்டனர். இலங்கை மீனவர்கள் 4 பேரையும் மீட்டு காசிமேடு மீனவர்கள் தங்கள் படகிலேயே 10 நாட்கள் தங்க வைத்துள்ளனர். சென்னை திரும்பி வரும்போது படகில் 4 இலங்கை மீனவர்கள் இருப்பது குறித்து 21ம் தேதி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். 4 இலங்கை மீனவர்களிடம் ஒன்றிய உளவுத்துறை, குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.