Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆப்பிரிக்காவில் பரவும் வைரசால் 100 பேர் பலி; அமெரிக்க மருத்துவருக்கு ‘எபோலா’ பாதிப்பு : டிரம்ப் கவலை; வெளிநாட்டினருக்கு பயணத் தடை

வாஷிங்டன்: ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ‘எபோலா’ வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கியது. அந்நாட்டின் இடூரி மாகாணத்தில் உள்ள சுரங்கப் பகுதியில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு, தற்போது அண்டை நாடான உகாண்டாவிற்கும் பரவியுள்ளது. இதுவரை இந்த கொடிய வைரஸால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பல சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவர். குறிப்பாக ‘பண்டிபுக்யோ’ என்ற அரிய வகை எபோலா வைரஸ் அங்கு பரவி வருவது உலக சுகாதார நிறுவனத்தை கவலையடைய செய்துள்ளது. இந்த குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை முறையான தடுப்பூசிகளோ அல்லது வியூக சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இக்கட்டான சூழலில், காங்கோவில் உள்ள நியன்குண்டே மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த அமெரிக்க மருத்துவ மிஷனரியை சேர்ந்த டாக்டர் பீட்டர் ஸ்டாஃபோர்டு என்பவருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அவரது மனைவி ரெபெக்கா ஸ்டாஃபோர்டு உட்பட 6 பேரை அமெரிக்க அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.

இவர்கள் அனைவரும் ஜெர்மனியில் உள்ள வைரஸ் பாதிப்பிற்கான சிறப்பு மருத்துவமனைக்கு லேப் வசதிகளுடன் கூடிய விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘ஆப்பிரிக்காவில் பரவியுள்ள எபோலா வைரஸ் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார். வைரஸ் பரவலைத் தடுக்க காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு 30 நாட்கள் தற்காலிக பயணத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும், அமெரிக்க விமான நிலையங்களில் தீவிர மருத்துவ கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.