சென்னை: விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவருக்கு போலீசார் அனைவரும் இணைந்து வளைகாப்பு நடத்தி, சீதனம் வழங்கி கவுரவித்தனர். சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பெண் காவலராக அன்பரசி என்பவர் பணியாற்றி வருகிறார். அன்பரசிக்கு திருமணம் நடந்து, தற்போது 9 மாதம் நிறைமாத கர்ப்பணியாக உள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் காவலர் அன்பரசிக்கு, காவல் நிலையத்தில் உடன் பணியாற்றும் காவலர்கள் வளைகாப்பு நடத்த சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் இருவர் வளைகாப்பு நடத்த சம்மதம் தெரிவித்தனர். அதைதொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பெண் காவலர் அன்பரசிக்கு வளைகாப்பு நடத்தினர். அப்போது சக பெண் காவலர்கள், அன்பரசிக்கு சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வளைகாப்பு செய்து, பூக்கள் தூவினர். அப்போது இன்ஸ்பெக்டர்கள் இருவரும் தாய் வீட்டு சீதனம் போல் பூ, பழங்கள் தாம்பூளம் வழங்கி பெண் காவலரை கவுரவித்தனர். அதை தொடர்ந்து அன்பரசி வளைகாப்பு நடத்திய போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.