விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கொலையின்போது துண்டித்த தலையை கொலையாளிகள் பாலத்தில் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையை மீட்டு உடலைத் தேடி வரும் காவலர்கள் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அய்யனார் கோயில் சாலையில் முடங்கியாற்றுப் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான பொதுமக்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலையில் அப்பாலத்தின் பக்கவாட்டில் துண்டிக்கப்பட்ட மனித தலை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் துண்டிக்கப்பட்ட தலையை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் காவலாளி பூவையா என்பவற்றின் தலை என்பது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலை துண்டிக்கப்பட்டு பாலத்தின் அருகே வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக மூவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.