விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டியில் உள்ள அரசுப்பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டது சின்னமூப்பன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீருக்காகவும், சமையலுக்காகவும் குடிநீர் தொட்டியானது பள்ளிக்கு அருகில் உள்ளது.
நேற்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடுபட்டிருந்தது. இன்று காலை சிற்றுண்டி செய்வதற்காக நேற்று இரவே சமையல் செய்யும் பெண்கள் சமையல் முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக்கு சென்றுள்ளனர். அச்சமயம் குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்க்கையில் குடிநீர் தொட்டிக்குள் மாட்டு சாணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்களின் செயலால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு, புதிய குடிநீர்
தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.