விருதுநகர்: விருதுநகரில் 2 நாள் கள ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர்களுடன் பேசி, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு செய்யும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி கோவையில் கள ஆய்வை தொடங்கினார். இதையடுத்து நவ. 9 மற்றும் 10ம் தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து வேனில் விருதுநகருக்கு பிற்பகல் 12.20 மணிக்கு சென்றார். அங்கு சென்ற முதல்வருக்கு, பொதுப்பணித்துறை அலுவலகம் பகுதியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையில் கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், தப்பாட்டங்கள் முழங்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தொண்டர்கள் ஆகியோர் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் கூடி நின்று வரவேற்றனர்.
பிரமாண்ட வரவேற்பிற்கு பிறகு கன்னிசேரிபுதூர் மேலச்சின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பகல் 1 மணி அளவில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொழிற்சாலை பெற்றுள்ள உரிமச்சான்றை ஆய்வு செய்தார். அங்கு பட்டாசுகள் தயாரிப்பதற்கான ரசாயனப்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை, தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைக்கும் அறைகள் போன்ற இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘எத்தனை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறீர்கள்? எவ்வளவு மணி நேரம் வேலை செய்கிறீர்கள்? வார விடுமுறை எப்போது? பட்டாசு தயாரிக்கும் பணி, சந்திக்கும் சிக்கல்கள் என்ன’’ என கேட்டறிந்தார். அவர்கள் விவரங்களை தெரிவித்தனர். அப்போது ஒரு பெண்ணிடம், ‘‘உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா’’ என்றார். அதற்கு அந்த பெண், ‘எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை கேட்ட முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ஆலை நிர்வாகி மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர், அனைத்து தொழிற்சாலைகளிலும் பசுமையான சூழலைப் பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்துமாறும் அறிவுறுத்தினார். மேலும், பட்டாசு ஆலை உரிமையாளரிடம், பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முறையான காப்பீடு வசதி செய்து தர வேண்டும் என அறிவுறுத்தியதோடு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், நேற்றிரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், முதல்வரின் அறிவிப்புகள், மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கலெக்டர் ஜெயசீலன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விருதுநகர் ராம்கோ மாளிகையில் நேற்றிரவு முதல்வர் தங்கினார். 2ம் நாளாக இன்று விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, 57 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்று விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
* முதல்வர் ஆய்வு செய்வது முதல்முறை வெடி தொழிலுக்கு விடியல்- உரிமையாளர் மகிழ்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் நாகராஜன் கூறும்போது, ‘‘எங்களது பட்டாசு ஆலைக்கு திடீரென வந்து முதல்வர், ஆய்வு செய்தார். பட்டாசு ஆலைகளில் ஒரு முதல்வர் வந்து ஆய்வு செய்தது இதுதான் முதல்முறை. முதல்வர் எங்களை தேடி வந்ததால் பட்டாசு தொழிலுக்கு விடிவுகாலம் பிறக்கும். தொழிலில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம்’’ என்றார்.
* ‘முதல்வர் எங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி’-பெண் தொழிலாளி
பட்டாசு ஆலையில் முதல்வரிடம் பேசியது குறித்து தொழிலாளி இசக்கியம்மாள் கூறும்போது, ‘‘முதல்வர் எங்களிடம் பேசியது மகிழ்சியாக இருந்தது. முதல்வர் வரும்போது புல்லட் வெடி தயாரித்துக் கொண்டிருந்தோம். பாதுகாப்பாக வேலை செய்வதால் எங்களது பட்டாசு ஆலையில் 10 ஆண்டுகளில் ஒரு விபத்து கூட நடைபெறவில்லை என்றேன். விபத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால், எங்களது குழந்தைகள் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும்’, என்றார்.
* அரை கி.மீ நடந்து சென்று மனுக்கள் வாங்கினார்
விருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் வரவேற்பை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களை பார்த்ததும் காரில் இருந்து திடீரென இறங்கி அரை கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று, சாலையோரத்தில் கூடியிருந்த மக்களிடம் கைகளை குலுக்கியதோடு, பொதுமக்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அப்போது முதல்வரை பார்த்து தொண்டர்கள், மக்கள் கைகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்.
* ‘அண்ணே…. அண்ணே…’ முதல்வர் நெகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் ‘அண்ணே… அண்ணே…’ என்றும், குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள்’ என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
* 45 நிமிடம் ரோடு ஷோ: இருபுறமும் திரண்டு மக்கள் உற்சாகம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6 மணியளவில், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது ரோடு ஷோவை வேனில் இருந்தபடி துவக்கினார். இருபுறமும் திரண்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆரவாரத்துடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களின் வரவேற்பை வேனில் இருந்தபடி ஏற்றுக் கொண்ட முதல்வர், கைகளை அசைத்தும், கும்பிட்டபடியும் சென்றார். புதிய பேருந்து நிலையம் துவங்கி, கவுசிகா ஆற்றுப்பாலம், எம்ஜிஆர் சிலை, அருப்புக்கோட்டை ரோடு மேம்பாலம், அல்லம்பட்டி முக்கு ரோடு வழியாக ராமமூர்த்தி சாலை வரை சென்றார்.
இந்த 2.50 கிமீ தூரத்தை முதல்வர் கடக்க சுமார் 45 நிமிடம் வரை ஆனது. வழியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மேடைகள் அமைத்து கரகாட்டம், செண்டை மேளம், நாட்டுப்புற இசை, மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பை கண்டு முதல்வர் நெகிழ்ந்தார். மேலும், முதல்வரை சிலர் ‘‘அண்ணே… அண்ணே…’’ என அழைத்தனர். பயணத்தின் இறுதியாக அவர் நேற்றிரவு எஸ்எஸ்கே சரஸ்வதி கிராண்ட் மஹாலில் நடந்த திமுக கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
* மாற்றுத்திறனாளியை தேடி சென்று மனு பெற்றார்
பட்டாசு ஆலை ஆய்வுக்கு வந்த முதல்வரை காண ஆலையின் வெளியே தூய்மை பணியாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மணிகண்டன் என்ற மாற்றுத்திறனாளி வீல்சேரில் காத்திருந்தார். ஆய்வு முடித்து முதல்வர் வெளியே வரும்போது இதனை கண்டார். உடனே காரை விட்டு இறங்கி மாற்றுத்திறனாளி வைத்திருந்த மனுவை நேரடியாக பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
* கேக், பழங்களை வாங்கி சென்ற முதல்வர் ‘அப்பா’ என்று கூப்பிட்டு நெகிழ்ந்த மாணவிகள்
விருதுநகர் மாவட்ட கள ஆய்விற்காக வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் சூலக்கரை பகுதியில் அமைந்துள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை சந்தித்து பேச திட்டிமிட்டிருந்தார். இதற்காக தனது வேனில் கிளம்பியவர், சூலக்கரை மேட்டில் உள்ள ஒரு பேக்கரியை பார்த்ததும், வண்டியை நிறுத்துமாறு கூறினார். பின்னர் முதல்வர் வேனைவிட்டு இறங்கி, நேராக பேக்கரிக்குள் சென்றார். அங்கிருந்து கேக்குகள், பிஸ்கட்களை பணம் கொடுத்து வாங்கினார். தொடர்ந்து அருகில் உள்ள கடையில் பழங்களையும் வாங்கினார்.
இதைப் பார்த்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏன் இவ்வளவு கேக்குகளையும், பழங்களையும் வாங்குகிறார் என்பதை அறியாமல் திகைத்தபடி நின்றனர். தொடர்ந்து அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற முதல்வரை, இன்முகத்துடன் மாணவிகள் வரவேற்றனர். மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தான் வாங்கி வந்த கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை முதல்வர் வழங்கினார். இதைப் பார்த்ததும் அந்த மாணவிகள் அன்பின் பாசத்தில் நெகிழ்ந்தனர்.
கிராமத்தில் இருந்து தங்கள் பிள்ளைகளை பார்க்க வரும் தந்தை, எப்படி வெறும் கையோடு வருவார்? தனது பிள்ளைகளுக்கு என்னென்ன பொருள் பிடிக்கும் என்பதை அறிந்து, அவர் விரும்பிய பொருளை வாங்கி வந்து கொடுப்பார்.
அதைப்போல ஒரு தந்தையாய் முதல்வர் கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை வாங்கி வந்த அன்பை பார்த்து மகிழ்ந்த மாணவிகள் அன்பின் உச்சத்திற்கு சென்று, முதல்வரை பார்த்து, ‘உங்களை அப்பா என அழைக்கலாமா…’ என்றனர். தொடர்ந்து, ‘‘உங்களது குழந்தையைப் போல நினைத்து ஸ்வீட் வாங்கி வந்ததை வார்த்தையால் சொல்ல முடியாது. எங்க பெற்றோரைப் போல நீங்க… அப்பா என்றதும் ஸ்மைல் வருகிறது’’ என தனது உணர்ச்சிகளால் முதல்வரை மட்டுமின்றி, சுற்றியிருந்த அனைவரையும் உருகச் செய்தனர். தொடர்ந்து முதல்வர், ‘‘வரட்டுமா…. எல்லாருக்கும் போயிட்டு வர்றேன்….
இந்த பக்கம் வர்றபோதெல்லாம் வர்றேன்’’ என முதல்வர் நெகிழ்ச்சியுடன் கூறியதைக் கேட்டதும், பாசப்பினைப்பில் சிக்கிய மாணவிகள், ‘பை அப்பா…. பை..’’. எனக் கூறி முதல்வர் வேனில் ஏறிச் செல்லும் வரை காப்பக வாசல் வந்து டாடா கட்டி அன்பால் அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டனர். முதல்வர் காப்பகத்திற்கு சென்றது முதல், திரும்பி சென்றது வரை நீண்டகாலமாக பிரிந்திருந்த தந்தையை மகள்கள் பார்த்தைப் போலவும், பிள்ளைகளை பிரிந்திருந்த தந்தை பார்த்ததும் எப்படி உணர்ச்சி ததும்ப மகிழ்ந்திருப்பார்களோ….. அதைப் போன்றதொரு மகிழ்ச்சியான குடும்பத்தை காப்பகம் சந்தித்திருக்கிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ‘அப்பா…’ நிறைவான நாள் என குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.