விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (9.11.2024), நாளையும் (10.11.2024) விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்தபோது, விருதுநகரில் உள்ள மதன் பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பட்டாசு தொழிற்சாலை ஆய்வு
விருதுநகர், கன்னிசேரி புதூர். மேலச்சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோது, தொழிற்சாலை பெற்றுள்ள உரிமச் சான்றினை ஆய்வு செய்து, அங்கு பட்டாசுகள் தயாரிப்பதற்கான இரசாயனப் பொருட்கள் வைப்பறை. தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, மைக்ரோ கார்டு திரி வைப்பறை போன்ற இடங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சுமார் 80 பேர் பணிபுரியும் இத்தொழிற்சாலையில், 36 பெண்கள் பணியாற்றிவரும் நிலையில், அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார்.
இப்பட்டாசு தொழிற்சாலை இதுவரையில் விபத்து ஏற்படாமல் மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட்டுவருவதை கேட்டறிந்த முதலமைச்சர், அனைத்து தொழிற்சாலைகளிலும் பசுமையான சூழலைப் பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தவும் அறிவுறுத்தினார். மேலும், இந்நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணிபுரியும்தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பிற்கான முறையான காப்பீடு வசதியினை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், இத்தொழிற்சாலைக்கு வெளியே திரளாக கூடியிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் , மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக விருதுநகர் செல்லும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.முதலமைச்சரின் ஆய்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், எ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆட்சித் தலைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப. முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் கந்தசாமி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் ஆனந்த், மதன் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் நாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.