*ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் முடிவு
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் வருடம் தோறும் மே, ஜூன் மாதங்கள், தேன்மேற்கு பருவமழை பெய்வதாலும், ஜூன் 1ம்தேதி அணை திறப்பதாலும் கன்னிப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகிவிடுவார்கள்.
மாவட்டத்தில் பறக்கை பகுதியில் சரியான நேரத்தில் நெல் சாகுபடி செய்வார்கள். ஆனால் இந்த வருடம் பறக்கை பெரிய குளங்களில் உள்ள மடைகள் சீர் செய்யப்படுவதால் நெல்சாகுபடி பணி தாமதம் ஆகியுள்ளது. தாமதம் ஏற்பட்டதை சரிசெய்ய கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு பறக்கை விவசாயிகள் தங்களது வயல்களில் உளுந்து சாகுபடி செய்து இருந்தனர்.
உளுந்து அறுவடை செய்து முடித்துள்ளனர். ஆனால் தற்போது பறக்கை, சுசீந்திரம், தேரூர் பகுதியில் சாகுபடி பணிக்காக நாற்றங்கால் தயார் செய்து உள்ளனர். ஆனால் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி பல இடங்களில் நாற்றங்காலில் இருந்த நாற்றுகளை எடுத்து சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆனால் பறக்கை விவசாயிகள் வருகிற 5ம் தேதிக்கு பிறகு நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை தனியாக பிரித்து வயல்களில் நடவு செய்யவுள்ளனர். ஆனால் சுசீந்திரம் பெரிய குளம் மூலம் பாசன வசதி பெறும் சுசீந்திரம் வயல்பரப்புகளில் தற்போது சாகுபடி தொடங்கி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் பல பகுதியில் நாற்றங்கால் தயாரிக்காமல் நேரடியாக விதைப்பு பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்து உள்ளனர். இது குறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு ஏற்றவகையில் பருவமழை தொடங்கியுள்ளது. மேலும் அணையும் திறக்கப்படவுள்ளதால், விவசாயிகள் சாகுபடி பணிக்கு ஆயத்தம் ஆகி வருகின்றனர். தற்போது விவசாயிகள் விளைவிக்கும் நெல்லிற்கு தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2450 வரை பணம் கொடுக்கிறது. இதனால் பலர் நெல் விவசாயத்திற்கு இறங்கியுள்ளனர்.
வயல்களில் நடவு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. அப்படி ஆட்கள் கிடைத்தாலும் சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு ஏக்கர் வயல் நடவு செய்வதற்கு குறைந்தது ரூ.6 ஆயிரம் வரை கூலியாக செல்கிறது. இதனை குறைக்கும் வகையில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை தேர்வு செய்துள்ளனர். குறிப்பாக தோவாளை சானலை நம்பியுள்ள பெரும்பாலான வயல்களில் தொழிவிதைப்பு மூலம் சாகுபடி பணியை மேற்கொள்ளவுள்ளனர்.
இதுபோல் டிரம்சீலர் மூலம் நெல் விதைகளை விதைக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு நடவு சம்பளம் கொடுப்பது மிச்சமாகும். அதுபோல் எந்திரம் கொண்டு நடவு பணிகளை மேற்கொள்ள வேளாண்மை துறை அறிவுரை வழங்கி வருகிறது.
அப்படி எந்திரம் கொண்டு நடவு செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மானியமும் வழங்குகிறது. இப்படி பல்வேறு வசதிகள் விவசாயிகளுக்கு இருப்பதால், புதிதாக பல விவசாயிகள் குமரி மாவட்டத்தில் உருவாகியுள்ளனர். மேலும் தோட்டக்கலை பயிரான வாழை சாகுபடியில் இருந்து பல விவசாயிகள் நெல் சாகுபடிக்கும் மாறி வருகின்றனர் என்றார்.