விருச்சிக ராசி என்பது செவ்வாயின் ஆதிக்கத்தில் இருக்கும் ராசி என்பதால், இந்த ராசியில் பிறந்த இளைஞர்கள் உடல் வலிமை உடையவர்களாக இருந்தாலும், சந்திரன் நீசம் ஆகும் ராசி என்பதால், மனதில் பயம் அதிகம். யானைக்குத் தன் பலம் தெரியாது என்பது போல, இவர்கள் பலம் இவர்களுக்குத் தெரியாது. சிறந்த விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஆனால், இருட்டை கண்டு அஞ்சுவர். கரப்பான் பூச்சிக்கு பயப்படுவர். விருச்சிக ராசி இளைஞர்கள், நண்பர்களிடம் பண்பாகவும், பாசமாகவும் இருக்கத் தெரிந்தவர்கள். ஆபத்து என்றால், உயிரை கொடுத்து உதவுவர். தங்களின் பெற்றோர், உற்றார், நண்பர்கள் மீது அதிக அன்பும், பாசமும், விஸ்வாசமும் கொண்டவர்கள். உண்மை பேசும் நல்லவர்கள்.
மதிநுட்பம் மிக்கவர்கள்
விருச்சிக ராசி இளைஞர்கள் எதைச் செய்வதாக இருந்தாலும், அதை நுட்பமாகச் செய்து காட்டுவார்கள். முரண்பட்ட கருத்துடைய இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எதையும் செய்து முடிப்பார்கள்.
பல துறை ஞானமும் சாதனைப் பயணமும்
விருச்சிக ராசி இளைஞர்கள், ஒரு நிமிடம்கூட ஓய்ந்து உட்காரமாட்டார்கள். அப்படி இவர்கள் ஒரு நிமிடம் சோர்ந்து இருந்தால், இவர்கள் மனதுக்குள் சஞ்சலமும் குழப்பமும் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். இவர்களுக் கென்று ஒரு குறிக்கோள், லட்சியம் ஆகியவற்றில் இளம் வயதிலேயே ஆர்வம் ஊட்டி லட்சியப் பாதையில் இவர்கள் பயணிக்க பெற்றோரும், ஆசிரியரும், நண்பர்களும், உடன்பிறப்புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். இவர்களை சாதனையை நோக்கி அழைத்துச் செல்ல தக்க வழிகாட்டி ஒருவர் இவர்களின் வாழ்க்கையில் அமைய வேண்டும்.
பொறாமை
விருச்சிக ராசி இளைஞர்கள், முன்னிலையில் மற்றவர்களைப் பாராட்டிப் பேசக்கூடாது. காரணம், இவர்களுக்கு அது தங்களைக் குறைத்து பேசுவதாகத் தோன்றும். அதனால் பாராட்டப் பட்டவரின் மீது கோபமும் பொறாமையும் உண்டாகும். இவர்களின் தனித்திறமைகளைப் பாராட்டி புகழ வேண்டுமே தவிர ‘அவனைப் பார்’ ‘இவனை பார்’ ‘அவரைப்போல் வரவேண்டும்’ ‘இவரை போல் வரவேண்டும்’ என்று மற்றவர்களை முன் உதாரணம் காட்டக் கூடாது.
வீரியமா? காரியமா?
விருச்சிக ராசி இளைஞர்கள், நாம் முன்பே சொன்னது போல், விளையாட்டில் கெட்டிக் காரர்களாக இருப்பார்கள். ஆர்வமும் முயற்சியும் இருக்கும். ஆனால், பெரியவர்கள் இவர்களிடம் ‘நீ கால்பந்து விளையாட வேண்டாம். செஸ் விளையாடக் கற்றுக் கொள் அல்லது கிரிக்கெட் விளையாடு. அதில்தான் நீ பெரிய அளவில் சாதிக்க முடியும்’ என்று கூறினால், அவர்கள் விளையாடுவதை அடியோடு நிறுத்தி விடுவார்கள். யாரிடமும் சண்டை போடுவதோ விவாதம் பண்ணுவதோ இவர்களின் வழக்கம் கிடையாது. இவர்களுக்கு உள் பயம் அதிகம். எனவே, வாய்ச் சண்டை போட மாட்டார்கள். ஆனால், காரியத்தில் கெட்டிக்காரர்கள். தன் காரியத்தை உத்தேசித்துத் தன் பாதையை மாற்றிக் கொள்வார்கள். மனதுக்குள் மிகவும் வேதனைப்படுவர். ஒதுங்கிச் செல்வர்.
ஆழ்கடல் போன்ற மனம்
விருச்சிக ராசி இளைஞர்கள், வெளியே பார்க்க அமைதியாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு மிகுந்தகவலையும், இயலாமையும் இருக்கும். சில வேளைகளில் அவர்களுக்குள் கோபமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும். அவ்வேளைகளில் இவர்கள் திரைப்படம், சங்கீதம் அல்லது விளையாட்டு எனத் தங்களை வேறு துறைகளில் ஈடுபடுத்தி தங்கள் உணர்ச்சிகளை மடைமாற்றம் செய்து கொள்வர். ஒரு விருச்சிக ராசி இளைஞன், எப்போதும் விளையாட்டுத் திடலிலேயே இருக்கிறான் என்றால், அவனுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் என்பது மட்டுமல்ல, அவனுக்கு வீடு பிடிக்கவில்லை என்பதும்தான். இதை நுட்பமாகப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் எப்போதும் பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டே தன் அறையில் தனியாக இருக்கிறான் என்றால், அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பது அல்ல. மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறான். ஏனெனில் அவன் மனம் மிகவும் தளர்ச்சி அடைந்திருக்கிறது.
படிப்பும் முன்னேற்றமும்
படிப்பு விஷயத்தில் யாரும் தயவு செய்து விருச்சிக ராசி இளைஞர்களை வற்புறுத்த வேண்டாம். அவர்களுக்கு ஆர்வம் இருக்கும் துறையில் ஆரம்பத்தில் இருந்தே அவர்களை திறமையானவர்களாக அவர்களை வளர்த்து ஆளாக்குவதுதான் பெற்றோரின் முக்கியக் கடமை ஆகும். ‘நீட் தேர்வு தேர்ச்சி பெறாவிட்டால், பிடிஎஸ் சேர்ந்து படி’ என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். `திரும்பவும் நீட் தேர்வு எழுது’ என்று ஊக்கப்படுத்துங்கள். இரண்டு மூன்று ஆண்டுகள் போனாலும் பரவாயில்லை. அவர்கள் முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள் அல்லது இனி நமக்கு கிடைக்காது வேறு கோர்ஸ் சேர்வோம் என்று மகிழ்ச்சியாக 20 வயதில்கூட கல்லூரியில் சேர்ந்து அங்குச் சிறப்பாகப் படித்து முனைவர் பட்டம் பெற்று டாக்டர் ஆகிவிடுவார்கள்.
அலைபாயும் மனசு
அமாவாசை, பௌர்ணமி நேரங்களில் இவர்களின் மன சஞ்சலம்அதிகமாக இருக்கும். அதைக் கவனித்து அவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களின் அலைபாயும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் ‘வேண்டாம் என்றால் வேண்டாம்’ என்று அவர்கள் போக்கிலேயே போகவிட்டு, கூடவே கைபிடித்துச் செல்லும் பெற்றோர்களே விருச்சிக ராசிக்காரர்களை சாதனையாளராக்கும் பெற்றோர் ஆவர்.
விலகிச் செல்லும் குணம்
விருச்சிக ராசி இளைஞரிடம் ‘உனக்கு என்ன தெரியும். நீ ஒரு முட்டாள்’ என்று வார்த்தைகளால் காயப்படுத்தக் கூடாது. அவர்கள் உள்ளுக்குள் உடைந்து போவது மட்டுமல்ல சிதைந்து போவார்கள். மீண்டும் அவர்களை மறு உருவாக்கம் செய்வது எளிதான காரியம் அல்ல. சிறுவயதில் கீழ்ப்படிதல் உள்ள பிள்ளைகளாக இருக்கும் பல விருச்சிக ராசியினர் வளர்ந்த பின்பு தாங்களே முடிவு எடுக்கக் கூடிய ஒரு காலகட்டம் வரும்போது யாரிடம் கீழ்ப்படிதலோடு இருந்தார்களோ அவர்களையெல்லாம் விட்டு விலகி சென்று விடுவதுண்டு.
கலந்து பேசி முடிவெடுங்கள்
விருச்சிக ராசி இளைஞர்களின் கருத்தைக் கேட்டு, அவர்களை வளர்க்க வேண்டும். அவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களோடு கலந்து பேசி, அவர்கள் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். பெற்றோருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், விருச்சிக ராசி இளைஞர்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள். அந்த வேளைகளிலும் இவர்களை அரவணைத்து ‘நாங்கள் இருக்கிறோம். கவலைப்படாதே’ என்ற பாதுகாப்பு உணர்வை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் ஊட்டி வளர்க்க வேண்டும்.