விருச்சிக ராசி சந்திரன் நீசமாகும் ராசி. செவ்வாய் ஆட்சியாக உள்ள ராசி. கார்த்திகை மாதம் சூரியன் இந்த ராசியில் இருப்பார்.
முழுமை, நிறைவு
விருச்சிக ராசிக்காரரிடம் உள்ளே பயமும் சங்தேகமும் வெளியே முரட்டுத்தனமும் காணப்படும். அன்பு செலுத்து வதிலும் பகை பாராட்டுவதிலும் உச்சத்துக்கே சென்றுவிடுவர். விருச்சிக ராசிக்காரர், எதையும் அரைகுறையாக விட்டுச் செல்ல மாட்டார். எல்லாவற்றையும் முழுமையாக நிறைவாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.
மர்ம மனிதர்
விருச்சிக ராசி நீர் ராசி என்பதால், இவரது மனம் கடல்நீரை போல ஆழமாகவும் மர்மங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அமைதியாக இருப்பார். திடீரென்று உணர்ச்சிவசப்படுவார். இவருக்கு மன அழுத்தமும் குழப்பமும் அதிகம். வெறித்தனமாக கடும் வேகத்துடன் செயல்படுவார்.
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
போட்டிகளில் கண்டிப்பாக தனக்கு வெற்றி உண்டு என்ற தன்னம்பிக்கையும் சில வேளைகளில் தற்பெருமையும் கொண்டவர். கவிதையாகப் பேசிப் பெண்களை மயக்கிக் கவர்ந்துவிடுவார். தலையாட்டிப் பொம்மை போல் பெண்ணை மாற்றிவிடுவார். பெண்களை வசீகரிப்பதில் கெட்டிக்காரர்.
நிதானமே பிரதானம்
பொதுவாக விருச்சக ராசி ஆண்கள் யாரிடமும் தங்கள் காதலை உடனே சொல்லிவிட மாட்டார்கள். யாரோடும் `சட்’ என்று நட்புக்கொள்வதில்லை. வெகு நிதானமாக ஆலோசித்த பின்பே, நண்பராகவோ காதலராகவோ யாரையும் ஏற்றுக்கொள்வார்கள். அல்லது தனது வாழ்வில் அவர்களுக்கு ஓர் இடம் அளிப்பார்கள். நட்பும் காதலும் நேர்மையாகவும், விஸ்வாசமாகவும், உண்மையாகவும், தனக்கு ஆதரவாகவும், தனக்கு மட்டுமே சொந்தமானதாகவும் இருக்கின்றதா என்பதை ஒரு முறைக்கு பலமுறை சோதித்து அறிந்து கொள்வார்கள். இவர்களுக்கு நட்பும் காதலும் ஒன்றுதான். இரண்டுமே இவர்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க வேண்டும். வாழ்வில் மற்ற எல்லாவற்றையும்விட அன்புக்கும் காதலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், விருச்சிக ராசிக்காரர்கள்.
கோபதாபங்கள் அதிகம்
விருச்சிக ராசிக்காரரோடு பழகுவது, கத்தி மீது நடப்பது போன்றதுதான். சிறிய விஷயங்களுக்குக்கூட அதிகமாக கோபித்துக் கொண்டு, பேசாமல் இருந்து விடுவர். அல்லது வேண்டவே, வேண்டாம் என்று விலகிச் செல்வர். இவர்களின் ஏச்சும் பேச்சும், தேள் கொடுக்கு போல சுருக் என்று கொட்டி, நண்பர் மற்றும் மற்ற ஆட்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தும்.
கட்டுப்பாடும் சுதந்திரமும்
விருச்சிக ராசிக்காரருக்கு உண்மையான காதல் என்பது வெளிப்படையான காதல். அவரவர்க்கு என்று ஒரு ஸ்பேஸ் உண்டு என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. கணவனும் மனைவியும் ஈருடல் ஓருயிராக வாழவேண்டும் என்று ஆசைப்படுவார். எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற விருச்சக ராசி ஆண், தன் மனைவியுடன்கூட போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பார்.
விருப்பமானவை
விருச்சிக ராசிக்காரர், `இன்டோர் கேம்ஸ்களில்’ ஆர்வம் உடையவர். கேரம்போர்டு, செஸ், பரமபதம் போன்ற விளையாட்டுகள் இவருக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இது போன்ற விளையாட்டுப் பொருட்களை இவருக்குப் பரிசாக அளித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். புத்தக வாசிப்பில் ஆர்வம் உடைய இவருக்கு, புத்தகங்களும் விருப்பமான பரிசுகள் ஆகும்.
தெரிவில் தெளிவு
விருச்சிக ராசி ஆண் மிக நிதானமாகவே தங்களுடைய நண்பர்களைத் தெரிவு செய்வார். ஒரு வேலைக்கு போவதாக இருந்தாலும் 10 முறை ஆலோசித்து 11 வது முறைதான் அந்த வேலையைத் தெரிவு செய்வார். தனக்கான எதிர்காலத் திட்டங்களை மிக நிதானமாக யோசித்து வரையறுத்துக்கொள்வார். வேலை பார்க்கும் இடங்களில் முதலாளிக்கு விஸ்வாசம் ஆகவும், தன்னால் இயன்றவரை முழு நேரமும் முழு உழைப்பையும் நல்க வேண்டும் என்று நினைப்பார். அது போலவே, தன் நிறுவனத்திற்காக கடுமையாக உழைப்பார்.
நேர்மையின் சிகரம்
விருச்சிக ராசிக்காரருக்குப் பொய், புரட்டு, பித்தலாட்டம் என்பது தெரியாது. யாராவது தன்னை ஏமாற்ற நினைத்தால், அவர்களை அடியோடு காலி செய்துவிடுவார். அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தி விடுவார். அவர் கதையை முடித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். இவருக்கு கண்ணுக்கு எட்டியவரை துரோகியோ எதிரியோ இருக்கப்படாது.
ஆடம்பர மோகம்
ஆசையும் கோபமும் அதிகம் உள்ள விருச்சிக ராசிக்காரர்கள், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், அதிக கடன் வாங்கி சமயத்தில் சிரமப்படுவார்கள். அவசரப்பட்டு கடனுக்கு பல வீட்டுப் பொருட்களை வாங்கிவிட்டு, பிறகு இ.எம்.ஐ செலுத்த முடியாமல் சிரமப்படுவர். ஒரு கடனை அடைக்க, மறுகடன் வாங்குவது அல்லது பழைய கடனை அடைத்து, புது கடன் வாங்குவது என்று இவர்களுக்கு கடனுக்கு மேல் கடன் கூடிக்கொண்டு போகும்.
மோதல் போக்கு
இவர் நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்தாலும்கூட சில சமயம் கருத்து முரண்பாடு வரும்போது, மேலதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதும் உண்டு. இவர்கள் அதிகாரப்போக்குடன் செயல்படுவதால், தனக்கு கீழே இருப்பவர்கள் எல்லோரிடமும் மிரட்டி உருட்டி வேலை வாங்கி விடுவார்கள். இதனால் முதலாளிக்கு இவர்கள் வேண்டியவர்களாக இருப்பார்கள்.
பயந்த சுபாவம்
விருச்சிக ராசிக்காரருக்கு எந்த நேரமும் ஒரு பயம் மனதுக்குள் இருக்கும். சந்திரன் நீசமாகும் ராசி என்பதால், இவர்கள் மனதுக்குள் பாதுகாப்பற்ற உணர்வு அடிக்கடி தோன்றும். அதனால்தான் யாரையும் இவர்கள் நம்புவதில்லை.
நிறைவு
கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்கும் என்பதால், விருச்சிக ராசி ஆண் பாசக்கொழுந்தாக இருப்பார். பழக்கத்திற்காக உயிரையே கொடுப்பார். சினத்தின் எல்லையாக இருப்பார். காதல் மன்மதனாக இருப்பார்.