கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி 11 கி.மீ நிளமும், 5.6 கி.மீ அகலமும் கொண்டு கடல்போல காட்சியளிக்கும்.
இந்த ஏரியின் ஆழம் கடல் மட்டத்தில் இருந்து 47.50 அடிகள், கொள்ளளவு 1445.00 மில்லியன் கன அடிகளாக உள்ளது. ஏரிக்கு தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு மூலமாக தண்ணீர் வரும். இது தவிர அரியலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களில் மழை பெய்யும் காலங்களில் கருவாட்டு ஓடை செங்கால் ஓடை ஆகியவைகளின் வழியாக மழைநீர் வரும்.
கீழ் கரையில் உள்ள 22 பாசன மதகுகள், மேல் கரையில் 6 மதகுகள் வழியாக விவசாய பானத்திற்கு ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.ஏரி முழுகொள்ளளவை எட்டும் பட்சத்தில் லால்பேட்டை அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ப வீராணம் அணைக்கட்டு மூலமாக உபரிநீர் வெளியேற்றப்படும். இதுதவிர சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதிய வீராணம் திட்டம் மூலம் வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றிற்கு 73 கன அடிகள் அனுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த நாட்களில் மழையின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய தால் அணையிலிருந்து இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு 1886 கன அடி நீர் வரத்தொடங்கியது . இதையடுத்து நடப்பு ஆண்டில் ஏரியானது இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் ஏரியானது தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இது இந்த ஆண்டில் இரண்டாவது முறையாகும். சென்ற முறை முழு நீரையும் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக மட்டுமே அனுப்பி வந்தோம். இந்த முறை பாசனத்திற்காகவும், சென்னை குடிநீர் தேவைக்காகவும் இந்த நீர் திறந்து விடப்படும். மேலும் வரும் காலம் மழை காலம் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அணைக்கட்டு மூலம் 1100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.