Tuesday, July 16, 2024
Home » வீராணம் ஏரி தூர்வாரப்படுமா? அமைச்சர் விளக்கம்

வீராணம் ஏரி தூர்வாரப்படுமா? அமைச்சர் விளக்கம்

by Karthik Yash

பேரவையில் கேள்வி நேரத்தின் போது காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனை செல்வன் (விசிக) பேசுகையில், ‘‘திருமுட்டம் பகுதி விவசாயிகளுடைய மனம் குளிருகிற வகையில், ஒரு சிறப்பான ஆய்வை நடத்தி, திருமுட்டம் பகுதியை காவிரி டெல்டா பாசனப் பகுதியோடு இணைக்க வேண்டும்’’ என்றார்.
அமைச்சர் துரைமுருகன்: திருமுட்டம் பகுதியை காவிரி டெல்டா பகுதிக்குள் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு ஏற்று இருக்கிறது. தொழில்நுட்ப ஆய்வுக் .குழுவிடமிருந்து சீக்கிரமாக அறிக்கை வாங்கி உங்களுக்காக சேர்த்து தருகிறேன்’’ என்றார்.
சிந்தனை செல்வன் (விசிக): வீராணம் ஏரி தூர்வாரப்பட வேண்டுமென்கிற கோரிக்கையும் இருக்கிறது. லால்பேட்டை பகுதியில் ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. கலைஞருடைய நூற்றாண்டை ஒட்டி அந்த பகுதியைச் சீரமைத்து கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா ஒன்றை அமைத்து, சர் ஆர்தர் காட்டனுடைய சிலையோடு அந்தப் பகுதி மக்கள் அதை பயன்படுத்தக்கூடிய வகையில் மேம்படுத்த வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: வீராணம் ஏரியை தூர்வார வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. முதலில் நாங்கள் முன்பு ஆட்சியில் இருந்தபோது தூர்வாரினோம். அந்த மண்ணை எங்கே கொட்ட வேண்டுமென்று கேட்டார்கள். இப்போது அங்கே மண் எவ்வளவு இருக்கிறது என்று கேட்டீர்கள் என்றால், அப்போது சுமார் 42 லட்சத்து 58 ஆயிரம் கன அடி மீட்டருக்கு வண்டல் எடுத்தோம். இப்போது, 1 கோடியே 27 லட்சம் கன மீட்டருக்கு தூர்வார வேண்டியிருக்கிறது. எனவே, அதை தூர்வாரி ஆழப்படுத்தி செப்பனிடுவதற்கு 770 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எனவே, இந்த அரசாங்கத்தினுடைய நிதி நிலைமைக்கேற்ப அது தூர்வாரப்படும்.

* நீட் தேர்வில் குளறுபடி இல்லை என்ற நயினார்
பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் பாஜ சட்டப்பேரவை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: நீட் தேர்வில் ஏற்பட்ட சில முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுப்போம் என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். அதனை பொருட்படுத்தாமல் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என கூறுகின்றனர். நீட் தொடங்கியதிலிருந்து குளறுபடிநடைபெறவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

* மருத்துவத்துறையில் 3,645 காலி பணியிடங்கள் டிசம்பருக்குள் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்ப திட்டம்: அமைச்சர் தகவல்
அமைச்சர் மா.சுப்பிரமணியின் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உதவி மருத்துவர் (பொது) பதவியில் 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் பதவியில் 367 இடங்கள், கண் மருத்துவ உதவியாளர் பதவியில் 100 இடங்கள், மருந்தாளுநர் (சித்தா) பதவியில் 49 இடங்கள், உள்ளிட்ட 21 வகை பதவிகளில் 3,645 காலி பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கான தேர்வுடிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

* துணை சபாநாயகர் கூறிய சிங்கம் கதையால் பேரவையில் சிரிப்பலை
சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது: காட்டில் சிங்கம் ஒன்று, “இறைவா எதற்கும் அஞ்சி நடுங்கும் சின்னஞ் சிறு விலங்காகவோ, கொசுவாகவோ நீ என்னை படைக்காமல் எல்லா விலங்குகளும் பறவைகளும் என்னை பார்த்து அஞ்சி நடுங்கும் சிங்கமாக படைத்துள்ளாய் உனக்கு நன்றி!” என்றது. இதைக்கேட்ட கொசுக்கள் “சிங்கமே கொசுக்களாகிய நாங்கள் உன்னை விட வலிமையானவர்கள். இதை அறிந்து அடக்கமாக பேசு” என்றது. இதைக் கேட்ட சிங்கம் “அற்ப கொசுவே யாரிடம் என்ன பேச்சு பேசுகிறாய், நான் நினைத்தால் ஒரே கையில் 400 கொசுக்களை பிடித்து விடுவேன், உன் கூட்டத்தையே அழித்து விடுவேன்” என இறுமாந்தது. அதற்கு “சிங்கமே நம்மில் யார் வலிமையானவர்கள் என்பதை சண்டை போட்டு முடிவு செய்யலாம் என்று சொன்னது.

நீங்கள் ”என்னிடம் சண்டைக்கு வருகின்றீர்களா, வாருங்கள் நொடியில் உங்களை வீழ்த்துகிறேன் என்று கர்ஜித்தது. கொசு வேகமாக பறந்து வந்து சிங்கத்தின் முகத்தில் கடித்தது. உடனே, சிங்கம் தன் முன்னங்காலால் முகத்தில் வேகமாக அறைந்தது, கொசு தப்பித்து சிங்கத்தின் உடலில் வட பக்கம், இட பக்கம், பின்பக்கம் என எல்லா இடத்திலும் கடித்தது. நிதானம் இழந்த சிங்கம் கோவம் கொண்டு புலம்பியபடி கடித்த இடங்களிலெல்லாம் காலால் அறைந்தது. இதனால் சிங்கத்தின் உடலெல்லாம் காயம் ஏற்பட்டு வேடம் கலைந்து சோர்வடைந்து படுத்தது. அருகில் வந்த கொசு, இனி நான் தான் பெரியவன் என்று எண்ணி யாரையும் எளியவர் என்று கேலி செய்யாதே என்று புத்தி புகட்டியது. இதைத்தான், உருவு கண் டெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து என அய்யன் வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்றது. இதற்கும் இன்றைய அரசியல் நடப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

* தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.2100 கோடி கடன்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு
சட்டப் பேரவையில் நேற்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிப்புகள் பின்வருமாறு :
* தொழிலகங்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றி தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு சேவைகள் வழங்குவதற்கும் மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் தொடங்கப்படும்.
* ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கு டோக்கியோவில் வழிகாட்டி நிறுவனம் மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு உருவாக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
* திருவாரூர் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடியில் சுமார் 150 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.
* காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் 750 ஏக்கர் பரப்பில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
* சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
* மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ.2100 கோடி கடன் வழங்கப்படும்.
* ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் எம்-சண்டு உற்பத்தி ஆலை சுமார் ரூ.25 கோடியில் அமைக்கப்படும்.

* ‘அரசு கேபிள் டிவி நிறுவனத்தை ஐசியூவில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி’
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர், அரசு கேபிள் டிவி நிறுவனம் சரியான முறையில் நடப்பதில்லை என குற்றச்சாட்டு வைத்திருந்தார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை யாரோ ஒரு 3வது நபரிடம், ஒரு ஒப்பந்தக்காரர்களின் கையில் கொடுத்துவிட்டனர். ஐசியூவில் இருக்கும் நிலையில் உள்ள ஒரு நிறுவனத்தை எங்கள் கையில் கொடுத்துவிட்டு, ஏதோ நாங்கள் சரியாக நடத்தி கொடுத்து வரும் சூழ்நிலையில், இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டு வைப்பதும், ஒரு அறிக்கை வெளியிடுவதும் மிகவும் கபட நாடகமாக கருதுகிறேன் என்றார்.

குறைந்த கட்டணத்தில் இணையதள தொலைக்காட்சி சேவைகள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
தமிழக சட்டப் பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிப்புகள் பின்வருமாறு :
* சென்னை பெருங்குடி தொழிற்பேட்டையில் ஏறத்தாழ 3.60 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா இடவசதியை வெளிப்படைத்தன்மையுடன் விலைக் கொணரும் முறையில் அமைக்கப்படும்.
* குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்படும்.
* தமிழ்நாடு ஆழ்நிலைத் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்படும்.
* அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு நிறுவனம் வழங்கும் இலவச உறுப்பினர் சேவைகள் மூலம் 16 சேவைகளை வழங்கப்படும்.
* தமிழ்க் கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகள் விரிவாக்கப்படும்.
* மூன்றாண்டுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்தப்படும்.

You may also like

Leave a Comment

10 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi