சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2ம் தேதி காலையில் சென்னை, தலைமை செயலகம் வந்து கடலூரில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.23.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு துறை கட்டமைப்புகளை திறந்து வைத்து, ரூ.49.79 ேகாடி மதிப்பீட்டில் 9 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள், கோபாலபுரத்தில் குத்துச்சண்டை அகாடமி, தென்காசியில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த 3ம் தேதி (நேற்று முன்தினம்) முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதுபற்றி கூறும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் வீட்டில் ஓய்வெடுப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை மருத்துவமனை இயக்குனர் பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது: முதல்வருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதல்வருக்கு காய்ச்சலுக்கான வழக்கமான சிகிச்சை மற்றும் ஒரு சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.