‘பாக்’ நஹி ‘ஸ்ரீ’ போலோ!
பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் இனிப்புக் கடைகள் வித்தியாசமான முறையில் தங்களது ஆதரவையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள பிரபலமான இனிப்பு கடைகள் தங்களது இனிப்புகளின் பெயர்களை மாற்றத் தொடங்கியுள்ளன. மைசூர் பாக்’ பெயர் என்பது மைசூர் ஸ்ரீ’ என மாற்ற்பட்டுள்ளது. அதாவது மைசூர் பாக்’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று வருகிறது. இது பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளதாகக் கருதி மைசூர் பாக்’ பெயரை மைசூர் ஸ்ரீ’ என்று மாற்றி ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்வீட் கடை விற்பனை செய்து வருகிறது. அதேபோல் அந்தக் கடையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மற்ற இனிப்புகளான கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் உள்ளிட்டவற்றின் பெயர்களும் கோந்த் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாக்யஸ்ரீ, பாக்யராஜ், கொட்டப் பாக்கு, உள்ளிட்டவற்றின் பெயர்களையும் மாற்றி ஸ்ரீக்யஸ்ரீ, ஸ்ரீக்யராஜ், கொட்ட ஸ்ரீ என மாற்றி மீம் போட்டுக் கலாட்டா செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
தக்லைஃப் மோட்!
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஸ், அசோக் செல்வன் என முன்னணி பிரபலங்கள் நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாகப்போகும் திரைப்படம் தக் லைஃப். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் எல்லா மொழி களிலும் படத்திற்கான புரொமோஷன் வேகமாக நடந்து வருகிறது. படத்தின் ஓவர்சீஸ் புக்கிங் மட்டும் ரூ.20 லட்சம் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் கமல்ஹாசன் இவ்வளவு அனுபவங்கள், பலநூறு படங்கள் நடித்த பிறகும் கூட சளைக்காமல் புரமோஷன்களில் இப்போதைய தலைமுறையினருடன் இணைந்து கலாய்த்து, நடனம் ஆடி புரமோஷன் செய்து வருவதைக் கண்டு திரையுலகமும் பாராட்டி வருகிறது.