‘‘No means No”
போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பெண் ஒருவர் இந்தியாவின் ஹிமாசல் பிரதேசத்தில் தனியாக சாலையில் நடந்தபோது, ஒரு நபர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அந்த நபரின் செயலை வீடியோவில் பதிவு செய்து, ‘‘என்னை பின்தொடராதீர்கள்” என்று அவர் நேரடியாகக் கூறும் காட்சி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பெண் நெடுஞ்சாலையில் நடந்துகொண்டிருக்கிறார். பின்புறமாக ஒரு நபர் தொடர்கிறார். அதைக் கவனித்த பெண், திரும்பி அவரை நோக்கி, ‘‘ஏன் என்னை தொடர்ந்து வருகிறீர்கள்? என்னை பின்தொடராதீர்கள்!” என்று கூறுகிறார்.அந்த நபர் பதில் அளிக்கவில்லை. பின்னர் பெண், ‘‘நீங்கள் பின் தொடர்வதை வீடியோவில் பதிவு செய்கிறேன்” என்று எச்சரிக்கிறார். இது போலி புகார் அல்ல, உண்மையான சூழ்நிலை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வீடியோவை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, மக்களிடையே பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட உரிமைகள் குறித்த கலந்துரையாடலுக்குக் காரணமாகியுள்ளது. யாராயினும் ‘‘நோ என்றால் நோ” தான் என அந்த நபருக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
இந்தியா அமைதியான நாடு!
ஒரு ரஷ்யப் பெண், இந்தியா மற்றும் இந்திய இராணுவத்தின் மீதான தனது நன்றியும், பாராட்டும் நிறைந்த கருத்துக்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அவரது உரையாடல் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர் இந்திய இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக வழங்கும் பங்களிப்பை புகழ்ந்துள்ளார்.“இந்திய இராணுவம் மிகவும் ஒழுக்கமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அவர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களை பாதுகாக்கிறார்கள்,” என அவர் பாராட்டும் வீடியோ பரவி வருகிறது. மேலும், “இந்தியாவை நான் என் அமைதியான வீடாகக் கருதுகிறேன்” என்று உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார்.இந்த வீடியோவுக்கு நூற்றுக்கணக்கான பாராட்டுகள், பகிர்வுகள், மற்றும் பின்னூட்டங்கள் வந்துள்ளன.