Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஐபிக்கள், நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு அதிமுக ஐடி விங் பிரசாத் பரபரப்பு வாக்குமூலம்: அதிமுகவினர், சினிமா துறையினர் பீதி

சென்னை: விஐபிக்கள், நடிகர், நடிகைகளுக்கு கொக்கைன் சப்ளை செய்தது குறித்து அதிமுக பிரமுகர் பிரசாத் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் கடந்த மே 22ம் தேதி இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதில் அதிமுக பிரமுகர்கள் பிரசாத், விஜய் வாண்டையார், இசிஆர் ராஜா உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். எதிர் தரப்பைச் சேர்ந்த ஏடிஎஸ்பியின் மகன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பிரசாத், விஜய் வாண்டையார், ராஜா உள்ளிட்டவர்கள் சென்னையில் அமர்ந்து கொண்டு தனி அரசாங்கமே நடத்தி வந்துள்ளனர்.

அவர்களுக்கு அனைத்துக் கட்சியிலும் ஆதரவு இருந்துள்ளது. அதில், அதிமுகவில் உள்ள பல விஐபிக்களின் மகன்கள் குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் ஆதரவாக இருந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அருணின் கவனத்துக்கு சென்றதும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இணை கமிஷனர் விஜயகுமார், துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் ஆகியோரது தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பிரசாத், அஜய் வாண்டையாருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போதைப் பொருள் வியாபாரி பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரதீப் வார இறுதியில் பார்ட்டி நடத்துவதும், அந்த பார்ட்டியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. அதில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தொடர்பில் இருப்பதும், அவர்கள் கொக்கைன் என்ற போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் கெவின் என்ற போதைப் பொருள் வியாபாரியும் கைது செய்யப்பட்டார். அதில் போதைப் பொருள் வியாபாரிகள் பிரதீப்குமார், கெவின் ஆகியோருக்கும் அதிமுக ஐடி விங் பிரமுகர் பிரசாத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும், அவர்தான் நடிகர், நடிகைகளுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போதைப் பொருள் வியாபாரிகள் வாட்ஸ் குரூப் தொடங்கி அதில் அதிமுக விஐபிக்களின் மகன்கள், நடிகர், நடிகைகளை இணைத்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

அதிமுக ஐடி விங் பிரமுகர் பிரசாத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் தயாளன், பிரசாத்தை ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பிரசாத்திடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இதுகுறித்து, பிரசாத் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வார இறுதியில் நான் பார்ட்டி நடத்துவேன். இந்த பார்ட்டியில் மது விருந்து நடக்கும். அதோடு விரும்புகிறவர்களுக்கு மட்டும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படும். என்னுடைய படத்தில் நடித்ததால் ஸ்ரீகாந்த் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்கள் பழக்கம் எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு முறையும் நடிகர்கள், பார்ட்டிக்கு வரும்போது நடிகைகள், சினிமா பிரபலங்களை அழைத்து வருவது வழக்கம்.

அப்படித்தான் பலரும் எங்களது பார்ட்டிக்கு வந்துள்ளனர். பிரதீப்குமாரைப் போல கெவினும் எங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ய ஆரம்பித்தார். அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர். அவர் சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறார். அவரது அப்பா பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சினிமாவில் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து விபசார தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருளும் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

அதில் பணம் அதிகமாக வந்ததால், விபசார தொழில், போதைப் பொருள் விற்பனை இரண்டையும் சேர்த்து செய்கிறார். கெவின் மூலமும் பல நடிகர், நடிகைகள் எனக்கு பழக்கம் ஆகினர். மேலும், விக்னேஷ், லிங்கேஷ் உள்பட சிலரிடமும் நான் போதைப் பொருள் வாங்கி உள்ளேன். என்னிடம் நாய் சேகர் பட கேமராமேன் விக்கி, இயக்குநர் ஷாம் மற்றும் சார்பட்டா நடிகர் ஒருவர் போதைப் பொருள் வாங்கியுள்ளனர். அவர்களும் அடிக்கடி போதை விருந்துக்கு வருவார்கள்.

அதேபோல நடிகர் கிருஷ்ணாவும் அவரது நண்பர்களான நடிகர்கள், இயக்குநர்கள் சிலரும் வருவார்கள். அதிமுக விஐபிக்களின் மகன்களும் வருவார்கள். அவர்கள் மது அருந்துவார்கள். அவர்களுக்கும் கெவின், பிரதீப்குமாரை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். அவர்கள் மூலம் போதைப் பொருட்கள் வாங்கினார்களா என்று எனக்கு தெரியாது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே போலீசார் பிரதீப்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் போதைப் பொருள் வியாபாரிகள் பிரதீப்குமார், கெவின் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பிரதீப்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்டையில் மேலும் சிலரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

* குறுக்கீடு இல்லாத விசாரணை

அதிமுக ஐடி விங் பிரமுகர் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் சென்னை போலீசார் அடுத்தடுத்து 2 நடிகர்கள், அதிமுக விளையாட்டு அணி மாநில செயலாளர் மற்றும் புரோக்கர்களை கைது ெசய்து வருகின்றனர். இந்த வழக்கில் போலீசார் எந்த தடையும் இல்லாமல் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், போதைப் பொருள் வழக்கு மட்டுமல்லாமல் எந்த வழக்கிலும் யாருடைய தலையீட்டுக்கும் போலீசார் அடி பணியக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல, சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்ற பிறகு எந்தவித குறுக்கீடுகளும் இல்லாமல் போலீசார் நடுநிலையோடு செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கிலும், எந்தவித உயர் அதிகாரிகளின் தலையீடோ, அரசியல் தலையீடோ இல்லாமல் போலீசார் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட வேண்டும்

என்று தனிப்படை போலீசாருக்கு அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தனிப்படை போலீசார் இந்த போதைப் பொருள் வழக்கில் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் சுயமாக செயல்பட்டு வருவதால் வேகமாகவும், திறப்படவும் செயல்பட முடிகிறது. இதற்கு முழு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கொடுத்த அறிவுரையும், கமிஷனர் அருணின் செயல்பாடுகளும்தான் காரணம் என்கின்றனர் சென்னை போலீசார்.