இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மெய்டீ மற்றும் பழங்குடி குக்கி இனத்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். தற்போது வரை அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் பாஜவின் பைரன் சிங் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ததை தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகும் நிலைமை சீரடையவில்லை. இந்நிலையில், வன்முறை தொடர்பாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி கடந்த சனிக்கிழமை இம்பால் விமான நிலையத்தில் வைத்து மெய்டீ அமைப்பின் அரம்பாய் தெங்கோல் தலைவர் கனன் சிங் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் இம்பால் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டு, கும்பல் கூட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் தடையை மீறி பல இடங்களில் நேற்றும் போராட்டங்கள் நீடித்தன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள குவாகேய்தெல் மற்றும் சிங்ஜமேயில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதனால் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர். இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யெய்ரிபோக் துலிஹாலில் உள்ள துணைப்பிரிவு கலெக்டர் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. கட்டிடத்திற்கு சில பகுதிகள் சேதம் அடைந்தன. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வாங்கேய், யெய்ரிபோக் மற்றும் குராய் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் சாலைகளின் நடுவில் டயர்களை எரித்தனர். இம்பால் விமான நிலையம் செல்லும் டிடிஎம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை முடக்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெண்களும் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தி, விரைவில் தேர்தல் நடத்த
வலியுறுத்தினர். இதற்கிடையே, மணிப்பூரின் நிலவரத்தை கட்சி மேலிட தலைவர்களுக்கு தெரிவிக்க முன்னாள் முதல்வர் பைரன் சிங் மற்றும் மாநிலங்களவை எம்பி லீஷெம்பா சனோஜோபா ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.