புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையில் முதல்வர் பிரேன்சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக கூறி வெளியான ஆடியோவை தடயவியல் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் தொடர் கலவரம் நடந்து வருவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வக்கீல் பிரசாந்த் பூஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,’ மணிப்பூர் வன்முறையில் முதல்வர் பிரேன்சிங்கிற்கு தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக ஆடியோ கிளிப்புகள் வெளியாகி உள்ளன.
எனவே அவரது பங்கு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,’ மணிப்பூர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
எனவே மணிப்பூர் விவகாரம் தொடர்பான விஷயத்தை சற்று தள்ளி வைக்கலாம். அதே சமயம் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் இனப் பங்களிப்பைக் குற்றம் சாட்டி வெளியான ஆடியோ கிளிப்களின் நம்பகத்தன்மை குறித்து ஒன்றிய தடய அறிவியல் ஆய்வகம் ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் மார்ச் 24 அன்று விசாரணையை தள்ளிவைத்தனர்.