இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கில் 3 பேரை மர்ம நபர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் வன்முறையில் இறந்த 35 பேரை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாட்டை அடுத்து வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு பிஷ்ணுபூரில் உள்ள குவாக்டா பகுதியில் 3 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்களை வாளாலும் வெட்டியுள்ளனர்.
இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சுராசந்த்பூரில் பாதுகாப்பு படைக்கும், வன்முறையாளர்களுக்கும் மோதல் வெடித்தது .இதில் போலீசார் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊரடங்கு தளர்வு நேரத்தை மாவட்ட நிர்வாகம் குறைத்துள்ளது. காலை 5 மணி முதல் மாலை 6 வரை இருந்த தளர்வு தற்போது காலை 5 மணி முதல் 10.30 மணி வரை என குறைக்கப்பட்டுள்ளது.
21ம் தேதி சட்டமன்ற கூட்டம் நடத்த பரிந்துரை
மணிப்பூரில் கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்தது. மே மாதம் முதல் அங்கு வன்முறை மற்றும் கலவரங்கள் அரங்கேறி வருகின்றன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில், ஆகஸ்ட் 21ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் அனுசுயா உக்கே அழைப்பு விடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஸ்டிரைக்கால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் அவசர சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 27 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பாக ஒரு நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.