திருஞானசம்பந்தர் பெருமான், திருவலிவம் என்னும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலத்தில் உறையும் விநாயகப் பெருமான் குறித்துப் பாடிய பாடல்; பிடி – பெண் யானை; கரி – ஆண் யானை. இதில் பிள்ளையாரின் ஆண் தன்மை குறித்தும், பெண் தன்மை குறித்தும் பாடியுள்ளார். பாடலின் பொருள்: விநாயகப் பெருமான் ஆணாகவும் பெண்ணாகவும் (விநாயகர் – விநாயகி), வந்து பக்தர்களின் துன்பத்தை நீக்குவார் என்பதே! இப்படி ஆண்பாதி, பெண் பாதியாக இருக்கும் விநாயகியை `வியாக்கிராபதி’ என்கின்றனர். ‘‘இதம் ப்ரம்ஹாமிதம் க்ஷேத்ரம்’’ என்ற சூக்தத்தின் படி, பாதி பக்தி, பாதி வழிபாடு என்கிற படிக்கு விநாயகி அனைத்து மக்களுக்கும் அருளாசி வழங்கி வருகிறாள்.எந்தப் பெயரானாலும், எந்த சொரூபமானாலும் ‘விக்னேஸ்வரி’ என்று அழைத்தாலும் விநாயகர் என்று அழைத்தாலும் ‘பிள்ளையார்’ தான் முழு முதற்கடவுள்.இவை தவிர, இடங்களுக்கு ஏற்பவும், சிறப்புகளுக்கு ஏற்பவும் நடைமுறைச் சூழல்களுக்கு ஏற்பவும் பிள்ளையார் புதுப்புது உருவங்களில் வணங்கப்படுகிறார். ஆக, கணபதியை எந்த விதத்தாலும் உபாசித்துப் போற்றி வணங்குபவர்களின் மனவிருப்பம் எதுவாக இருந்தாலும், குறைவற நிறைவேறும் என்பது திண்ணம். ‘விநாயகி வழிபாடு’ பற்றி விரிவாகக் காண்போம்.
இந்தியாவில் ‘பண்டைக் காலம் முதலே’ விநாயகி வழிபாடு’ இருந்து வருகிறது. விநாயகப் பெருமானுக்கு ‘பெண் சொரூபம்’ கற்பித்து, ‘விநாயகி’ என்னும் பெயரால் வடக்கே பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இவளை வைநாயகி, விநாயகி, விக்னேஸ்வரி, கணேஷ்வரி, கஜாணினி, கணேசனி என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள்.ஆன்மிக சீலரின் யோகினி பூஜையில், ஒரு முக்கியமான ‘அதிதேவதையாக’ விநாயகி விளங்குகிறாள். ‘தாந்திரிக கணேச ஆராதனை’ பிரபலமடைந்த பிறகு, ‘விநாயகி’ வழிபாடும் பிரபலமடைய ஆரம்பித்தது. விநாயகரின் பெண் சொரூபத்தைப் பற்றிக் கந்த புராணத்திலும், பிரம்ம புராணத்திலும் குறிப்புகள் உள்ளன. ‘அந்தகாசுர
வதம்’ நிமித்தம் பரமேஸ்வரன் ஜகன்மாதா, அம்பிகையின் பல ரூபங்களைப் படைத்தார். அவர்களில் ஒருத்தியை முதன்முதலில் விநாயகியாக உருவாக்கினார். அவள் ‘கணேசனி’ என்றழைக்கப்பட்டாள்.
‘கணேசனி’ எனப்படும் விநாயகியின் பிறப்பைப் பற்றி ‘லலிதா சகஸ்ர நாமாவளியில்’ வருகிற 77-வது நாமாவளி கூறுவதென்னவென்றால், ‘‘காமேஸ்வர முக லோக கல்பித ஸ்ரீ கணேஸ்வராயை நமஹ!’’ என்று பெண் வடிவை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. அதாவது அன்னை பார்வதி, சிவபெருமானின் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்ததன் விளைவாக ‘விநாயகி’ உதித்தாள் என்ற பொருளைத் தருகிறது. எனவே, சிவ – சக்தி எனும், இவ்விரண்டு மாபெரும் சக்திகளின் கூட்டுறவே ‘விநாயகி’ என்று சொல்லப்படுகிறது. ஓவியர்களும் சிற்பிகளும் இக்கருத்தைக் கொண்டே உருவாக்கிய ஓவியங்களும், சிலைகளும், சிற்பங்களும் ‘விநாயகியாக’ நாடெங்கும் பல இடங்களில் காணக்கிடக்கின்றன. ‘விநாயகி’யானவள் இரண்டு திருக்கரங்களிலும் பொற்சங்கிலிகள் அணிந்தவள். முக்கண் உடையவள்.
மாலை புரளும் தனங்களும், பருத்த வயிறும், பிருஷ்டமும் கழுத்திற்கு மேலே ஓங்கார அட்சரத்தை நினைவுருத்தும் கஜமுகமும் உடையவள்’ என்று ‘கணேச ஹிருதயத்தில்’ வரும் ஆறாவது ஸ்லோகம் ‘விநாயகி’யைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது.‘ஷோடச விநாயகர்’ எனும் விநாயகரின் பதினாறு வடிவங்களில் பெண் சொரூபமும் உள்ளது என்பர். ‘தேவி சகஸ்ர நாமம்’ என்னும் நூலில் லம்போதரி, கணேஸ்வரி, விக்னேஸ்வரி என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பெண் சொரூபம் குறித்து ஆகம சாஸ்திரங்களில் குறிப்பிடப்படாவிட்டாலும் சிற்பமும், சிலைகளில் பெண் சொரூபம்’ அமைத்து ‘விநாயகரி’யாக வழிபட்டு வருகிறார்கள்.
சமண மதத்தினர் விநாயகியை ‘கணேஸ்வரி’ என்றும் ‘வைநாயகி’ என்றும் அழைத்தார்கள். புத்த மதத்தினரான பௌத்தர்கள் இவளை. ‘கணபதி ஸ்ருதயி’ என்ற பெயரில் அழைத்து வழிபட்டனர். பௌத்த மதத்தின் பிரபல நூலான ‘அத்வர்வ கோச சங்கரார்த்தம்’ என்ற நூலின் ஆசிரியரான ‘அம்ருதானந்தர்’ என்பவர் பிள்ளையாரின் இருதயத்தை பெண் சொரூபமாகக் கற்பித்து, ‘கணேச ஹிருதயி’ என்ற பெயரைக் குறிப்பிட்டுள்ளார். ‘‘கணபதி ஹ்ருதயா ஏக முகாத் த்விபுஜா வரதா பயாந்திருத்யாசநம்’’ என்கிற ஸ்லோகத்தின் படி, இவள் ஒரு முகமுடனும், இருகைகளுடனும் அபயம் அளிக்கும் கோலத்தில் இருக்கிறாள். பொருளையும் அதன் இயக்கத்தையும் ‘சைவ சித்தாந்தம்’ சிவம் – சக்தி என இருவகைப்படுத்துகிறது. சிவத்தையும் சக்தியையும், சக்தியிடமிருந்து சிவத்தையும் பிரிக்க முடியாது. தனித் திருக்கும் போது சிவன் என்றும், செயல்படும் போது சக்தி எனவும் அழைக்கப்படும் என்று ஆன்றோர் கூறுவர். எனவே மகேஸ்வரன் ஆற்றலுக்கு மகேஸ்வரி என்றும், படைப்புக் கடவுளான பிரம்மனின் சக்திக்கு பிரம்மி எனவும் பெயரிட்டனர். இதே போன்று விநாயகரின் சக்திக்கு ‘விநாயகி’ என்றே பெயரிட்டனர்.
‘விநாயகி’ தென்னிந்தியாவில் யோகினியாகவோ, ஒரு பரிவார தேவதையாகவோ கருதப்படுவதில்லை. மாறாக வித்தையில் சிறந்த வித்யா’ என்ற வழிபாட்டில் அவள் ஒரு ‘சக்தி’ சொரூபமாக மதிக்கப்படுகிறாள். அதனால், தமிழ்நாட்டில் விநாயகியை, ஸ்ரீ வித்யா, கணபதியாக ஏற்று, ‘ஸ்ரீ வாஞ்சாகல்பயதா மகா கணபதி’ என்று போற்றுகிறார்கள். இந்த வாஞ்சா கல்பலதா மகா கணபதி என்னும் ரூபமானது கஜ முகத்தைத் தவிர, கழுத்து முதல் பாதம் வரை பெண் ரூபமாகவே காட்சியளிக்கிறாள். இவளை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் நாம் அன்றாடம் எதிர்நோக்கும், தீராத விநாயதிகள், சங்கடங்கள், மத்தபுத்தி, திருமணத் தடங்கள், சந்ததியின்மை, வியாபார நஷ்டம், மனக்கிலேசம், விபரீதபுத்தி, அபக்யாதிகள், வாகன விபத்து ஆகியவற்றைப் போக்கி நமக்கு நற்பலன்களைத் தந்தருள்வாள்.‘விநாயகி’ பூஜை மிகக் கடினமானது. பூஜைக்குரிய மந்திரங்களை சிரத்தையுடன் உச்சாடனம் செய்தால்தான் அதன் பலன் கிடைக்கும். இதற்கு திரிகரண சுத்தி மிகவும் அவசியம். இவ்வாறு விநாயகி பூஜையைத் தீவிரமாக அனுஷ்டிப்பவர், உடலிலேயே அத்தெய்வம் தனது முழு சக்தியையும் பிரயோகித்து நிரந்தரப்படுத்துவதால் அந்த உபாசகரே!வித்யாகணபதி’ யாகப் பாவிக்கப்படுகிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆகவே, வித்யா கணபதி உபாசகரை நாம் வணங்கினாலே போதும் நம்துன்பங்கள் அனைத்தும் தீரும். கணபதியின் பெண் சொரூபம் அமைந்திருக்கும் கோயில்களும் வழிபாடும் நம் பாரத நாட்டின் வடபகுதியில்தான் அதிகமாக இருக்கின்றன. தென்னாட்டில் ‘விநாயகி’ வழிபாடு மிகமிகக் குறைவு. இந்தியாவில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ‘விநாயகி வழிபாடு’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் விநாயகியின் சிலைகளும் சிற்பங்களும் காணப்படுகின்றன. குப்தர்கள் காலம் முதல் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலம் வரை ‘விநாயகி வழிபாடு’ பல கோயில்களிலும் கோலாகலமாக நடைபெற்றது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில்,
* உத்திரப்பிரதேசத்தில் கிடைத்த ‘விநாயகி’ சிலை மிகவும் அபூர்வமானது. யானை மீது அமர்ந்து, வலது கரத்தில் பழங்கள், இடது கரத்தில் வஜ்ராயுதம் வைத்துக் கொண்டு அழகிய திருக்கோலம் கொண்டு காட்சியளிக்கிறாள் விநாயகி.
* இதே மாநிலத்தில் உள்ள பாந்தரா மாவட்டத்தில் ‘ரிகியான்’ என்னுமிடத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான யோகினி ஆலயத்தில் ‘கணேஸ்வரி’ சிலை ஒன்று 1909-ஆம் ஆண்டு தொல் பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.
v ஒடிஸா மாநிலத்தில், ‘ராண்பூர் ஜெரியால்’ என்ற இடத்திலும், புவனேஸ்வரை அடுத்த ‘ஹீராபூர்’ என்ற இடத்திலும் யோகினி தேவதைகளுக்கான கோயில்கள் இருக்கின்றன. அழகிய கிரீடத்தோடு விளங்கும் இது போன்ற அற்புதமான விநாயகி சிலையை வேறு எங்கும் காண முடியாது.
* ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் நகருக்கு அருகில் உள்ளது, ஹர்ஷநகர். இங்கே மிகவும் புராதனமான சிவாலயம் ஒன்று உள்ளது. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இக்கோயிலில் மகுடம் தரித்த அழகான ஒரு விநாயகி சிலையைக் காணலாம். இவளை வழிபடும் பக்தர்கள் இவளது மேனியில் மஞ்சள், குங்குமம் பொடிகளைப் பூசி வழிபடுகிறார்கள்.
* மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் நகருக்கு அருகில் உள்ள ‘பேடாகாட்’ என்னும் சிற்றூரில் ஒரு ‘யோகினி மந்திரி’ உள்ளது. பெரிய பரப்பளவில் வட்ட வடிவமாகக்
கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் 64-யோகினிகள் வீற்றிருக்கிறார்கள். இதில் ஒரு யோகினி, விநாயகியாக காட்சி தருகிறாள். இவளை ‘கஜாணனி’ என்றும் ‘ஐங்கினி’ என்றும் அழைக்கிறார்கள். இச்சிலை கி.பி.11-ஆம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
* இதே மாநிலத்தில், உள்ள ‘திகம்கர்க்’ என்னும் ஊரில் உள்ள சிவாலயத்தில் ‘நர்த்தன விநாயகி’ சிலை வடிவில் அழகிய திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். பல அணிமணிகளுடன் எழிற் கோலத்தில் உள்ளாள். இவளது ‘நர்த்தன கோலம்’ தனித்தன்மையுடன் காட்சியளிக்கிறது.
* ‘திரிகங்கா’ எனும் மற்றொரு இடத்தில் கிடைத்த விநாயகி சிலை மிகவும் விநோதமானது. பத்ம பீடத்தின் மீது பத்மாசனி மாதிரி அமர்ந்து திருக்கோலம் கொண்டு ‘யக்ஞோப வீதாரிணியாக’ இந்த விநாயகி காட்சியளிக்கிறாள்.
* கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலாரில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அபூர்வமான தொரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. முதலாம் ராஜேந்திர சோழனால் இந்த கல்வெட்டு உருவானதாக தொல் பொருள் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்தக் கல்வெட்டு, தென்னிந்தியாவில் இருந்த ஒரு யோகினி ஆலயத்தில் 64-யோகினிகள், சப்த மாதர்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுவதோடு, ‘விநாயகி’ வடிவம் கொண்ட பல முத்திரைகளையும் தெரிவிக்கிறது.
* ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடத்தில், அழகிய பல ஆபரணங்கள் பூண்டு அலங்கார, வடிவில் கொள்ளை அழகு கொண்ட ‘கணேஷ்வரியை’, சாரதா அம்மன் ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில்’ உள்ள சந்நதியில் காணலாம்.
* கேரளா மாநிலத்தில், கி.பி.17-ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட மிக அற்புதமான வடிவமைப்புக் கொண்ட விநாயகி வெண்கலச்சிலை ஜெர்மனி நாட்டில் உள்ள முனீச் நகரில் உள்ள ‘வோ ஸ்கேர் குண்டே’ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கன்றின் முகம் கொண்ட ஓர் அபூர்வமான கிரீடத்தை இந்த விநாயகி அணிந்திருக்கிறாள்.
* அதே போல், ஜப்பானில் விநாயகர் வழிபாடு மிகவும் அதிகம். அதிலும் ‘ஜோ – ஜோ’ விநாயகர் வழிபாடு மிகவும் அற்புதம். ‘ஜோ – ஜோ’ வை வணங்கினால் ஆயுள் கூடும் என்பது ஜப்பானிய மக்களின் நம்பிக்கை. நம்மூர் விநாயகரின் ஜப்பானிய திருநாமம்தான் ‘ஜோ – ஜோ’. இந்த விநாயகரின் விசேஷம் என்ன வென்றால், இந்த விநாயகர் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கிறார். அது மட்டுமா? இரண்டு பேரும் வாஞ்சையுடன் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து கட்டி அரவணைத்தவாறு நிற்கும் கோலத்தில் சாட்சி தருகிறார்கள். வெகு அழகு, அற்புதம்! ஆண் வடிவில் இருக்கும் விநாயகர் மஞ்சள் உடை அணிந்து நீல வண்ணத்தில் காட்சியளிக்கிறார். பெண் வடிவ விநாயகி பச்சை நிறத்தில் புடவை அணிந்து மஞ்சள் நிறத்தில் காட்சி தருகிறார். இருவரும் அணைத்தபடி நிற்கும் கோலம் காணக்கண்கள் போதாது!தமிழ்நாட்டில் முதன் முதலாக கி.பி.11-ஆம் நூற்றாண்டில்தான் புலிக்கால் விநாயகி சிலையை சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிற்பிகள் உருவாக்கியுள்ளார்கள். அதன் பிறகு மதுரை சுந்தரேஸ்வரர் கோயில் சந்நதியின் நுழைவாயிலின் வடப்புறத்தூணில் விநாயகி வடிவம் காணப்படுகிறது. புலிக்கால்களுடன் காணப்படும் இவ்விநாயகியை தொல் பொருள் ஆய்வாளர்கள் ‘வியாக்ரபாத விநாயகியர்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
* கி.பி.15-ஆம் நூற்றாண்டில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள ஒரு தூணில் பெண் வடிவம் கொண்ட விநாயகி சிலை உள்ளது. இது சதுர் புஜங்களுடன் சுகாசனத்தில் உள்ளது. இதை ‘விக்னேஸ்வரி’, ‘கணேசாயினி’ என்று அழைக்கிறார்கள். இவள் ஒரு காலை மடக்கி மற்றொரு காலைத் தொங்க விட்டுக்கொண்டு சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் கோலம் காண்போரைக் கவரும் வண்ணம் உள்ளது.
* நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசுதேவ நல்லூர் திருக்கோயிலின் தேரில் போர்க் கோலம் கொண்ட விநாயகி வடிவம் காணப்படுகிறது. இடுப்புக்குக் கீழே யாளி வடிவத்துடனும், சதுர்புஜங்களில் வாள், மழு, கதை, கேடயம் ஆகியவற்றுடன் வேகமாக ஓடும் பாவனையில் காட்சியளிக்கிறாள்.
* நாகர்கோவில், வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் கோயிலில் வீணை வாசிக்கும் புலிக்கால்களையுடைய விநாயகி சிலை உள்ளது. எழிலான தோற்றத்துடன் காணப் படும் இந்த விநாயகியை ‘வியாக்ரபாத விநாயகி’ என்றழைக்கிறார்கள்.
*பாடல் பெற்ற திருத்தலங்களான திருச்செந்தூர் திருக்குறுங்குடி, பழனி போன்ற திருத்தலங்களில் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எலவானரூர் கோட்டை என்னுமிடத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான விநாயகி சிலை
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
*ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலுள்ள சௌந்தர நாயகித் தாயார் சந்நதியின் மண்டபத்தின் மேல் ‘வீணையை மீட்டும் விநாயகி’ வடிவச் சிற்பத்தைக் காணலாம்.