திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் கோபாலா… கோவிந்தா கோஷம் முழங்க பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை கோயிலிலிருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளம் முழங்க தேருக்கு கொண்டு வரப்பட்டனர். தேரில் அவர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் கலெக்டர் ஜெயசீலன், யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், சப்-கலெக்டர் விஸ்வநாதன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் வடம் பிடிக்க காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்களின் கோபாலா… கோவிந்தா…கோஷம் விண்ணதிர்ந்தது. கீழ ரத வீதியில் புறப்பட்ட தேர், தெற்கு ரத வீதி வழியாக மேல ரதவீதிக்கு சென்றது. அங்கிருந்து வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கீழ ரதவீதிக்கு வந்து நிலையை அடைந்தது. விழாவையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்து. தேரோட்டத்தை காண விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவில்லிபுத்தூரில் குவிந்தனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.