பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை வந்த இந்தியாவின் வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப்போட்டி வரை தான் வந்த நிலையில், தமக்கு பதக்கம் வழங்க வேண்டும் என வினேஷ் போகத் சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுத்துறைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் (சிஏஎஸ்) வழக்கு தொடர்ந்தார். வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா ஆஜராகி வாதாடினர்.
அப்போது வினேஷ் போகத் வேண்டுமென்றே எடையை அதிகரிக்கவில்லை, வீராங்கனைகள் போட்டிக்கு பின்பு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போது எடை அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டனர். மேலும் மல்யுத்த சம்மேளனத்தின் விதிகள் வீராங்கனைகளுக்கு எதிராக இருப்பதாகவும், அது வீரர்களின் உடல்நலத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதனை மாற்றி வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இந்த வழக்கில் இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தீர்ப்பு 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுபற்றி வக்கீல் விதுஷ்பத் சிங்கானியா கூறுகையில், தீர்ப்பின் காலக்கெடுவை ஒரு முறைக்கு மேல் நீட்டித்ததால், அவர்கள் இந்தவிவகாரத்தில் தீவிரமாக சிந்திக்கிறார்கள்.
நடுவர் யோசிக்கிறார் என்றால், இது எங்களுக்கு நல்லது. கடந்த காலங்களில் நான் சிஏஎஸ்-ல் பல வழக்குகளில் போராடினேன். ஆனால் இதில் வெற்றி விகிதம் மிகக் குறைவு. இந்த விஷயத்தில், நாங்கள் நடுவரிடமிருந்து ஒரு முக்கிய முடிவைக் கேட்கிறோம், இது கொஞ்சம் கடினம், ஆனால் ஏதாவது பெரியதாக நடக்கும் என்று நம்புகிறோம். நாம் அனைவரும் வினேஷுக்காக பிரார்த்தனை செய்வோம். அவருக்கு ஒரு பதக்கம் கிடைக்கும் என்று நம்புவோம். அது கிடைக்காவிட்டாலும் அவர் ஒரு சாம்பியன், தான் என்றார். இதனிடையே வினேஷ் போகத் பாரீசில் இருந்து நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டார்.