பாரீஸ் : ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், எடை கூடி இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பதக்கம் பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன விதிப்படி மல்யுத்தத்தில் ஒவ்வொரு எடைப்பிரிவிற்கும் 2 நாட்கள் போட்டிகள் நடத்தப்படும். அந்த 2 நாட்களும் வீரர், வீராங்கனைகளின் எடை சோதனையிடப்படும். அதன்படி முதல் நாள் எடை சோதனையில் வினேஷ் தகுதி பெற்றார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள நாளில் வினேஷ் போகத்தின் எடையை சோதித்த போது, 50 கிலோவை தாண்டி, 150 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவர் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளார்.
முதல் நாள் எடை சோதனை 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் நிலையில், எத்தனை முறை வேண்டுமானாலும் வீரர்கள் தங்கள் எடையை சோதனை செய்ய முறையிடலாம். ஆனால் இறுதி நாளில் 15 நிமிடங்கள் மட்டுமே எடை சோதனைக்கு வழங்கப்படும். அதில் தோல்வி அடைந்த வினேஷ், எடை சோதனைக்கு கூடுதல் அவகாசம் கேட்டும் மருத்துவக் குழுவினர் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. முதல் நாள் எடை சோதனையில் வினேஷ் தகுதி பெற்றாலும், அதன் பிறகு அதே நாள் இரவில் தனிப்பட்ட முறையில் சோதித்த போது, 2 கிலோ எடை கூடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் உணவை தவிர்த்துவிட்டு, விடிய விடிய கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட வினேஷ் போகத், எடை குறைப்பிற்காக முடியை வெட்டிக் கொண்டதுடன், உடலில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவு ரத்தத்தையும் வெளியேற்றி உள்ளார். இது போன்ற கடினமான முயற்சிகளால் 1 கிலோ 850 கிராம் வரை எடையை குறைத்த வினேஷ் போகத்தால், எஞ்சிய 150 கிராம் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் அவரது ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவு தகர்ந்தது.