பாரீஸ் : மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி மேல்முறையீடு செய்தது. பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் (29 வயது), பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். இந்த நிலையில், இன்று உடல் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து வினேஷ் போகத்திற்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை அளித்திருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளத்திடம் முறைப்படி மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடைய தனது பயிற்சியாளரின் செயல்பாடுகள் குறித்தும் ஏற்கனவே சந்தேகம் தெரிவித்திருந்தார் வினேஷ் போகத். பிரிஜ் பூஷண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை ஒலிம்பிக்கில் பங்கேற்க விடாமல் தடுக்க சதி என கடந்த ஏப்ரலில் வினேஷ் போகத் புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.