டெல்லி: வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சதி இருப்பதாக சந்தேகிக்கிறேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின், மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கூறியதாவது;
இது இந்தியாவிற்கும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கும் எதிரான மிகப்பெரிய சதி. வினேஷ் போகத்தின் விளையாட்டு செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது. சிலருக்கு அந்த மகிழ்ச்சியை ஏற்க முடியாமல் போயிருக்கலாம். 100கிராம் எடையில் என்ன பிரச்னை இருக்கிறது?. அவரது வெற்றியால் யாருக்கோ சில பிரச்னைகள் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு 100 கிராம் எடையைக் குறைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நானும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற விஷயங்களை என்றும் பார்த்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.