பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக தீர்ப்பாயத்தின் மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு நாளை (ஆக. 16) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவே வெளியிடப்பட்டது. கியூபா வீராங்கனை கஸ்மேன் லோபசுடன் சேர்த்து வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற வினேஷ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த தீர்ப்பாயம், அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால், வினேஷுக்கு குறைந்தபட்சம் வெள்ளியாவது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த கோடிக் கணக்கான இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி/ஏமாற்றம் அடைந்துள்ளனர்.