சென்னை: செப். 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு விடுமுறை தினங்கள் என ஒரு பட்டியல் வெளியாகும். அதன்படி 2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியலில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பஞ்சாங்க கணிப்பாளர்கள் செப்டம்பர் 18ம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி வருகிறது. அதாவது ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4ம் நாள் வருகிறது.
எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அரசு அறிவித்திருப்பதால் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டிருந்த அறிக்கையில், கிறிஸ்தவ, இஸ்லாமிய பண்டிகைகளை அந்த மதத்தலைவர்களை ஆலோசித்து அறிவிக்கும் தமிழக அரசு, இந்துக்களின் பண்டிககைகள் பற்றிய விவரத்தை தன்னிச்சையாக அறிவிக்கிறது.
தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி பண்டிகை அரசு விடுமுறையை செப்டம்பர் 18ம் தேதி என உடனடியாக அரசாணை வெளியிடாவிட்டால் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 17ம் தேதிக்கு பதில் 18ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று விளாம்பழம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், லட்டு, தேங்காய் கொண்டு செய்த பலகாரங்கள் படையலிட்டு விநாயகரை வழிபடுங்கள். விநாயகரை வழிபட்டால் செல்வம் பெருகும், பேரும் புகழும் கிடைக்கும்.