சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடும் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.900க்கும், ஐஸ் மல்லி ரூ.600க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.1500க்கும், அரளி பூ ரூ.200க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.450க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.230க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று காலை அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. பூக்களை வாங்குவதற்கு சென்னை, புறநகர் பகுதியில் இருந்து சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் அலைமோதி வருகின்றனர். எனவே கோயம்பேடு மார்க்கெட் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் பணிகளில் ஈடுபடவேண்டும்’’ என்றார். அதேபோல், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
அதன் விவரம்: ஒரு கிலோ ஆப்பிள் ரூ.120 – ரூ.150, சாத்துக்குடி ரூ.40- ரூ.60, விளாங்காய் ரூ. 60, பேரிக்காய் ரூ.80- 100, மாதுளை ரூ.150, ஆரஞ்சு ரூ.35 – ரூ.50, கொய்யாக்காய் ரூ.40, வாழைப்பழம் ரூ.40- 50 என விற்கப்பட்டு வருகிறது.