சென்னை: விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 17ம் தேதிக்கு பதில் செப்டம்பர் 18ம் தேதியை (திங்கள்) பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17ம் தேதியில் இருந்து 18ம் தேதிக்கு (திங்கள்) மாற்றி அறிவிக்கப்படுகிறது. அதாவது, விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ம் தேதி தான் கொண்டாட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, பல்வேறு கோயில்களின் தலைமை தெரிவித்திருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.