சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகிறது. ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், ஒரு அடி முதல் 12 அடி வரை உயரமுள்ள சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் விநாயர் சதுர்த்தியன்று சாலை மற்றும் தெருக்களில் அரை அடி முதல் 18 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அவல், சுண்டல், சர்க்கரை பொங்கல், கரும்பு, பழவகைகள் வைத்து பக்தர்கள் படையலிடுவார்கள். தொடர்ந்து 2 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். மூன்றாம் நாள் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிலைகளுக்கு சிலை வடிவமைப்பாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் விநாயகர் சிலை உற்பத்தி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேலத்தை சேர்ந்த விநாயகர் சிலை விற்பனையாளர்கள் கூறியதாவது: சேலத்தில் ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி செய்யப்படும் சிலைகள் சேலத்தில் பல பகுதிகளுக்கும், தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. நீர்நிலைகளில் எளிதல் கரையும் வகையில் காகித கூழால் விநாயகர் சிலைகள், களிமண் விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு அடி முதல் பத்து அடி வரையுள்ள சிலைகள் உற்பத்தியாகிறது. ஒரு சிலை ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளது. லட்சுமி நாராயண விநாயகர், லிங்கம், ராஜஅலங்காரம், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, 5 தலை நாகத்தின் மீது சயன விநாயகர், சிவநர்த்தனம், மான், அன்னம், மயில், சிங்கம் வாகனம், அனுமன், நரசிம்மர், மும்முகம், சித்தி புத்தி, ராஜகணபதி உள்பட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் உள்ளன.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில், சேலத்தில் உத்தமசோழபுரம், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி உள்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட சிலைகள் அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகளை விற்பனையாளர்கள் ஆங்காங்கே குடோன் மற்றும் கடைகளில் குவித்துள்ளனர். இங்கு வந்து விற்பனையாளர்கள், பக்தர்கள் சிலை பார்த்து வாங்கிச்செல்கின்றனர். தற்போது 30 சதவீதம் விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை நெருங்கும் நேரத்தில் 70 முதல் 80 சதவீத சிலைகள் விற்பனையாகும். இவ்வாறு விற்பனையாளர்கள் கூறினர்.