சென்னை: விழுப்புரம்-தஞ்சை இரட்டை ரயில் பாதையை 2028ல் மகாமக திருவிழாவுக்கு முன் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; 1877-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சதர்ன் ரெயில்வே சென்னை கடற்கரையிலிருந்து விழுப்புரம் – மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் – திருச்சி – மதுரை வழியாக தூத்துக்குடிக்கு மீட்டர் கேஜ் ரெயில் பாதை அமைத்தது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில்கள் மூலம் பயணிகள் அழைத்துவரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது இந்த “சென்னை – விழுப்புரம் – மயிலாடுதுறை – கும்பகோணம் – திருச்சி – திண்டுக்கல் – மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி” பாதை தான் முக்கிய வழித்தடமாக இருந்திருக்கிறது.
இந்த பாதையில் இருந்து பிரியும் மற்ற பாதைகள் பிரான்ச் லைன் பாதைகளாக இருந்திருக்கின்றன. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மெயின் லைன் வழியாக இந்தோ – சிலோன் எக்ஸ்பிரஸ் ( Indo – Ceylon Express) ஓட துவங்கியது.
1930 காலகட்டத்தில் விழுப்புரத்தில் இருந்து விருதாச்சலம் – அரியலூர் – ஸ்ரீரங்கம் – வழியாக திருச்சிக்கு ஒரு பாதையும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை – காரைக்குடி – சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு ஒரு பாதையும்அமைக்கப்பட்டன.
அது முதல் “சென்னை – விழுப்புரம் – மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் – திருச்சி – புதுக்கோட்டை – காரைக்குடி – மானாமதுரை – ராமநாதபுரம் – பாம்பன் – ராமேஸ்வரம் ” முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது.
அப்போது சென்னையில் இருந்து தென்பகுதிக்கு இயக்கப்பட்ட மிக முக்கிய ரெயில்கள் என்று சொன்னால் அவை “போட் மெயில் ( Indo – Ceylon Express)” மற்றும் “திருவனந்தபுரம் மெயில்” ரெயில்கள் தான். இந்த இரண்டு மெயில் வண்டிகளுமே விழுப்புரம் – மயிலாடுதுறை – கும்பகோணம் – தஞ்சாவூர் – திருச்சி ” மெயின் லைன் வழியாக இயக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்கதும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான பாதையாக இந்த மெயின் லைன் பாதை இருந்துவருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் பிரதான போக்குவரத்து என்பது கப்பல் போக்குவரத்தாக இருந்ததால் இந்த மெயின் லைன் பாதை பல ஊர் கப்பல் துறைகளை இணைக்கும் ஒரு முக்கிய பாதையாக இருந்திருக்கிறது. மெயின் லைன் பாதை சரித்திர புகழ்வாய்ந்த ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் புண்ணிய நதியான காவிரி நதி பாயும் பகுதி வழியே செல்கிறது. இந்த பாதை பகுதி அனைத்துமே மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதி.
இந்த மெயின் லைன் பாதையில் திருச்சி – விழுப்புரம் இடையே தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் கடலூர் ஆகிய மூன்று மாநகராட்சிகள் உள்ளன. தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மூன்று மாவட்ட தலைநகரங்கள் வழியாகவும் செல்கின்றது.
மெயின் லைன் பாதையில் உள்ள கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையை சுற்றி தான் உலக புகழ் பெற்ற நவகிரக ஸ்தலங்கள் அமைந்து உள்ளன. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், நவக்கிரக கோவில்கள் எனப்படும் ஒன்பது திருக்கோயில்களும் இந்தப் பகுதியில் தான் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது அதோடு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் ஆகிய யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்கள் இந்த மெயின் லைன் பாதை பகுதியில் தான் அமைந்துள்ளன.
இந்த மெயின் லைன் பாதையில் பாரம்பரிய ஆதீன மடாலயங்கள் பல அமைபெற்றுள்ளன. கடலூர் தேவநாத சுவாமி திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் திருக்கோவில், சீர்காழி சட்டை நாதர் திருக்கோவில், மயிலாடுதுறை மாயூரநாதர்- அபயாம்பிகை அம்மன் திருக்கோயில்,
திருமணஞ்சேரி உத்வாகநாதர் திருக்கோவில், திருக்கடையூர் அபிராமி அம்மன் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், பல கோவில்கள் அமைந்துள்ள கோவில் நகரமாகவே இருக்கும் கும்பகோணம் மாநகர கோவில்கள், பாபநாசம் திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் திருக்கோவில், திட்டை வசிஸ்டேஸ்வரர் திருக்கோவில் என பல எண்ணற்ற ஆன்மீக மற்றும் பரிகார ஸ்தலங்களைக் கொண்டுள்ள பாதை இந்த மெயின் லைன் பாதை.
நாட்டின் வடபகுதியில் இருந்து வருபவர்கள், பிச்சாவரம், பூம்புகார், தரங்கம்பாடி, காரைக்கால், கோடியக்கரை, முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள், மனோரா உள்ளிட்ட பல கடற்கரை சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு இந்த மெயின் லைன் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்து மத கோயில்களை தவிர்த்து பார்க்கும் பொழுது நாகூர் ஆண்டவர் தர்கா , வேளாங்கண்ணி மாதா பேராலயம், முத்துப்பேட்டை தர்கா உள்ளிட்ட பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் இந்த மெயின் லைன் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டி இருக்கும். இப்படியாக சர்வ மத யாத்திரிகர்கள், ஆன்மீகவாதிகள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என இப்பகுதிக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மெயின் லைனில் தஞ்சாவூர் நிலையத்தை தொடர்ந்து தற்போது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை நிலையங்களும் வருடத்திற்கு 30 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி தந்து, NSG 4 தரத்தில் இருந்து, NSG 3 தரமுடைய நிலையங்களாக தர மேம்பாடு அடைந்துள்ளன.
இந்த மெயின் லைன் பாதையில் இருந்து தான் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி பாதையும், தஞ்சாவூரில் இருந்து காரைக்கால் பாதையும் பிரிகின்றன. மேலும் அந்த கிளைப்பாதைகளில் இருந்து நீடாமங்கலம் – மன்னார்குடி, நாகபட்டினம் – வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி கிளைபாதைகள் பிரிகின்றன. பேரளம் – காரைக்கால் பாதை புதிதாக அமைக்கப் பட்டுள்ளதால் “மயிலாடுதுறை – பேரளம் – திருநள்ளார் – காரைக்கால் – நாகூர் – நாகபட்டினம் – வேளாங்கண்ணி” பாதை உருவெடுக்கும். இப்படி எல்லா பாதைகளுக்குமான ரெயில்கள் மெயின் லைன் வழியாகத்தான் செல்ல வேண்டி இருக்கும்.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலூர் அருகில் உள்ள புது சத்திரம் பவர் பிளான்ட்டிற்கு தினசரி பல சரக்கு ரெயில்களில் நிலக்கரி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. மெயின் லைன் பாதையில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர். நெல்லிக்குப்பம் நிலையங்களில் சரக்கு முனையங்கள் உள்ளன. இங்கெல்லாம் சரக்குகள் ரெயில்கள் மூலம் ஏற்றி இறக்கப்பட்டு வருகின்றன. இவற்றை தவிர்த்து மெயின் லைனுடன் தொடர்புடைய நாகை, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம்பள்ளி, பட்டுக்கோட்டை போன்ற நிலைய சரக்கு முனையங்களில் சரக்குகள் ஏற்றி இறக்கப்பட்டு வருகின்றன. இந்த சரக்கு ரெயில்களும் மெயின் லைன் வழியாகத்தான் இயங்க வேண்டி இருக்கிறது.
மெயின் லைன் பாதை ஒற்றை ரெயில் பாதையாக இருப்பதால் பெருகிவரும் அதிகப்படியான பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகமாகி, திணறி கொண்டு வருகிறது. மேற்கொண்டு புதிய பயணிகள் ரெயில்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக உள்ளது. குறிப்பாக புதிய இரவு நேர தினசரி ரெயில் என்பது இந்த ஒற்றை பாதையில் கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி உள்ளது. போக்குவரத்து நெரிசலால் மெயின் லைன் ரெயில்களின் பயண நேரம்மும் வெகுவாக அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அப்பகுதியினரால் மெயின் லைன் வழியாக ரெயில்கள் கேட்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுகொண்டு இருக்கின்றன.
2028-ல் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா நடைபெற இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது இருக்கும் ஒற்றை பாதையில் இந்த மக்கள் கூட்டத்தை கையாள்வது என்பது சாத்தியப்படாத ஒன்று.
இப்படி எல்லா வகையிலும் பார்க்கும் பொழுது “தஞ்சாவூர் – மயிலாடுதுறை – விழுப்புரம்” மெயின் லைன் பாதையை இரட்டைப் பாதையாக்குவது என்பது காலத்தில் கட்டாயமாகி உள்ளது.
“தஞ்சாவூர் – மயிலாடுதுறை – விழுப்புரம்” மெயின் லைன் இரட்டை பாதைக்கான சர்வே பணிகள் 2019 யிலேயே துவங்கப்பட்டு FLS எனப்படும் Final Location Survey நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன் பிறகே விரிவான திட்ட அறிக்கை தயார்செய்து ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆகவே இந்த சர்வே பணிகளை விரைவுபடுத்தி , இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி “தஞ்சாவூர் – மயிலாடுதுறை – விழுப்புரம்” மெயின் லைன் இரட்டைப் பாதை திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கி விரைந்து முடித்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.