விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் மலட்டாற்றில் பழங்கால உறை கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே தளவானூர் மலட்டாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் சபரி ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பழங்கால மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்திய சுடுமண் உறை கிணறு புதையுண்டு இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது, மலட்டாற்றுக்கு அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் இதுவரை நிறைய தொல்லியல் தடயங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளோம். அதை தொடர்ந்து தளவானூர் மலட்டாற்றில் மேற்புற களஆய்வு மேற்கொண்ட போது பூமியின் மேற்பரப்பில் உறை கிணறு இருப்பதை கண்டறிந்தோம். உறை கிணறுகள் இரண்டு வகை உள்ளது. ஒன்று அடுக்கு வகை. மற்றொன்று சொருகு வகை உறை கிணறு. தளவானூர் மலட்டாற்றில் கண்டறிந்த உறை கிணறு அடுக்கு வகையை சார்ந்தவையாகும்.
குடிநீர் தேவைக்காகவும், வீட்டின் பயன்பாட்டுக்காகவும் உறை கிணறுகள் தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மை காலம் வரை இருந்து வருகிறது. தமிழகத்தில் ஆற்றுப்படுகையிலும் இதுபோன்ற உறை கிணறுகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான உறை கிணறுகள் ஏரி, குளம், ஆறு ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. வறட்சி காலங்களில் தண்ணீர் வற்றும் போது இந்த உறை கிணறுகள் அக்காலத்து மக்களுக்கு தண்ணீர் தேவையை பெரிதும் நிவர்த்தி செய்தன. மேலும் இது தண்ணீரை தெளிய வைக்கவும் மண் சரியாமல் இருக்கவும் இந்த அமைப்பை அக்காலத்தில் ஏற்படுத்தியுள்ளனர்.
இவற்றில் இருந்து அவர்கள் சுகாதாரமான குடிநீரை பெற்றனர். இதுபோன்ற உறை கிணறுகள் தமிழகத்தில் கீழடி, பூம்புகார், அரிக்கமேடு, மாமல்லபுரம் போன்ற இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், பேரங்கியூர், செஞ்சி, திருவாமாத்தூர் போன்ற பல இடங்களிலும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. மலட்டாற்றின் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் இதுவரை 80க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் கண்டறியப்பட்டு எங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தென்பெண்ணை ஆற்றில் தான் தொல்லியல் தடயங்கள் அதிகம் கிடைத்துள்ளது. ஆனால் முதல் முறையாக இப்போது மலட்டாற்றில் உறை கிணறு கிடைத்துள்ளது. மலட்டாற்றில் உடைந்த தாழியின் ஓடுகள், கெண்டி மூக்குகள் சிதைந்து ஆங்காங்கே கிடக்கிறது. மலட்டாற்று பகுதிகளிலும் மக்கள் வாழ்ந்ததற்கான சிறு, சிறு தடயங்கள் இப்போது கிடைக்க பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.