*போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை
விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று மாலை திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது நடை மேடைக்கு வந்தது. அப்போது எஸ்ஐ முத்து செல்வம் தலைமையிலான போலீசார் ரயிலின் பின்பக்க பொது பெட்டியில் சோதனை செய்தனர்.
அதில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பேக்கை திறந்து பார்த்தபோது காக்கிநிற செலோட்டேப் சுற்றப்பட்ட 3 பார்சல் இருந்தது. அதனை பிரித்து சோதனை நடத்தியபோது 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பறிமுதல் செய்த கஞ்சாவை விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து ரயிலில் கஞ்சாவை யார் கடத்தி வந்தது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.