*மாற்று இடம் கேட்டு ஆட்சியரிடம் மனு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே 51 திருநங்கைகளுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை வீடு கட்டி வாழ்வதற்கு தகுதியற்றவை என்றும், மாற்று இடம் வழங்க கோரியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் அய்யங்கோவில்பட்டு பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் சிவகாமி உள்ளிட்டவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் அருகே சானிமேடு-குப்பம் என்ற இடத்தில் 51 திருநங்கைகளுக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்டன.
இந்த இடம் வீடு கட்டி வாழ தகுதியற்ற இடமாகும். அங்கு வீடு கட்டி வசிக்க முடியாத தனி தீவை போன்று உள்ளது. எனவே, மாற்று இடத்தில் வீட்டுமனை வழங்க கோரி தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகிறோம். நாங்கள் மனு அளித்த பிறகு மூன்று தாசில்தார்கள், கலெக்டர்களும் மாறிவிட்டார்கள். எங்களுக்கு தகுதியான இடத்தில் வீட்டுமனை ஒதுக்கி தாருங்கள் என அனைவரும் கூட்டாக மனு அளித்துள்ளோம்.
எனவே, ஆட்சியர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மாற்று இடத்தில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யவும், புதிய திருநங்கைகளுக்கு வீட்டு மனை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.