*குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கடலூர் : மணிமுக்தாறு, வெள்ளாறு இணையும் பகுதியாக உள்ள கூடலையாத்தூர் பகுதியில் தடுப்பணை அமைத்து 20 கிராமங்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை மேம்படுத்திட வேண்டும், என விவசாயிகள் தெரிவித்தனர். கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை கேட்பு மற்றும் மேம்பாடு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வேளாண்மை துறை இணை இயக்குனர் பொறுப்பு ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாய பிரதிநிதிகள் வேல்முருகன், குஞ்சிதபாதம், தையல்நாயகி, ரவீந்திரன், முருகானந்தம், கலியபெருமாள், மகாராஜன், தேவநாதன், ராமலிங்கம், சிவகுமார் பேசினர். தென் மேற்கு பருவ மழை குறைவால் மேட்டூர் அணை நிரம்பாத நிலை உள்ளது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியுமா என்ற நிலை உள்ளது.
இதனால் கடலூர் மாவட்ட காவிரி பாசன பகுதியில் சம்பா சாகுபடிக்கு உத்திரவாதம் இல்லாத நிலையே தற்போது நிலவுகிறது. விவசாயிகள் முழுமையாக சாகுபடி பணிகளை துவக்கி முடிக்க ஏதுவாக மேட்டூர் அணை நிரம்பிய பிறகு சம்பா சாகுபடி பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெலிங்டன் ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். சேத்தியாத்தோப்பு பகுதியில் வேளாண்மை கட்டிட பணியை முழுமைப்படுத்த வேண்டும். விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மணிமுத்தாறு, வெள்ளாறு இணையும் பகுதியாக உள்ள கூடலையாத்தூர் பகுதியில் தடுப்பணை அமைத்து 20 கிராமங்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை மேம்படுத்திட வேண்டும்.
அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு கூடுதலாக அறுவடை இயந்திரங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மே மாத்தூர் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பண்ருட்டி மலட்டாற்று பகுதியில் தடுப்பணை அமைத்து பண்ருட்டி, அண்ணா கிராமம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு வழி காண வேண்டும். நத்தம் ஏரியில் வண்டல் மண் முறைகேட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை
தமிழக அரசு 6 வகையான பூச்சி கொல்லி மருந்துகளை தடை செய்துள்ளது. ஆனால் கடைகளில் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகள் விற்பனையை கண்காணிக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகளுக்கு மாற்று மருந்துகளை அடையாளம் காண வேண்டும். மண்ணையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும் களை கொல்லி மருந்துகளுக்கு மாற்று களை கொல்லி மருந்துகள் தயாரிக்க வேண்டும், என கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கூட்டத்தை நடத்தாத தாசில்தார்
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் வட்டார அளவிலும் குறை கேட்பு கூட்டம் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .இது போன்ற நிலையில் ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தில் உள்ள தாசில்தார் கூட்டம் என்றால் என்ன என்ற நிலையில் பேசுகிறார்.
இதனால் வட்டார அளவில் முடிக்கப்பட வேண்டிய விவசாயிகளின் அடிப்படை கோரிக்கைகள் இப்படி மாவட்ட அளவிற்கு கொண்டு வர வேண்டி உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகளிடம் லஞ்சம்
கூட்டத்தில் பேசிய விவசாயிகள், வடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்டத்தில் மாட்டு சந்தைகள் நடைபெறும் நிலையில் சந்தைக்கு மாடுகள் கொண்டு வரப்படும்போது காவல்துறையினர் லஞ்சம் வாங்கும் செயல் தொடர்கதை ஆகியுள்ளது.
விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் தொடர்பாக மாடுகளையும், கன்றுகளையும் வாங்குவதும், விற்பதும் மாட்டுச் சந்தையில் நடைபெற்று வரும் நிலையில் இது போன்று காவல்துறையினரின் செயல்பாடு குறித்து மாவட்ட எஸ்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.