கோபி : கோபி அருகே மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று முதன் முறையாக இயக்கப்பட்ட பேருந்தை மேள, தாளத்துடன் வரவேற்று பூஜை செய்து வழிபட்ட தொட்டகோம்பை கிராம மக்கள்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மலை கிராமம் தொட்டகோம்பை. சுமார் 100க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் வசித்து வரும் இக்கிராமம் டி.என்.பாளையம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனபகுதியில் அமைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளி உலகம் தெரியாமல் வசித்து வந்த கிராம மக்கள், ரேஷன் பொருட்கள் வாங்கவும், மருத்துவ வசதிக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிப்பட்டிக்கு நடந்தே சென்று வந்தனர்.
இப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ள நிலையில் அவர்களும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன் ஏற்பாட்டில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் இதுவரை பேருந்தையே பார்த்திராத இப்பகுதியை சேர்ந்த 35 மாணவ, மாணவிகளை விமானம் மூலமாக சென்னை அழைத்துச்சென்று முதலமைச்சர் பிறந்தநாளின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்து, தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து மலை கிராம குழந்தைகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் உடனடியாக தொட்டகோம்பை மலை கிராமத்திற்கு பேருந்து வசதி செய்ய உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் ஆய்வு செய்த போக்குவரத்து கழக அதிகாரிகள் கோபியில் இருந்து பங்களாபுதூர் வழியாக அத்தாணி வரை செல்லும் பேருந்தை இரு நேரங்களில் இயக்க முடிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று முதன் முறையாக கோபியில் இருந்து அரசு பேருந்து தொட்டகோம்பை மலை கிராமத்திற்கு இயக்கப்பட்டது.
கரும்பாறையில் இந்த பேருந்தை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன் மற்றும் கிராம மக்களுடன் தொட்டகோம்பை மலை கிராமத்திற்கு மலை வாழ் மக்களுடன் பயணம் செய்தார்.
இது வரை பேருந்து வசதி இல்லாத நிலையில் முதன்முறையாக வந்த பேருந்தை கிராம மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து பேருந்துக்கு மாலை அணிவித்தும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மரியாதை செலுத்திய கிராம மக்கள், குல தெய்வ கோயில் முன்பு பேருந்தை நிறுத்தி சிறப்பு பூஜை செய்து முதல் பயணத்தை தொடங்கினர்.
பல தலைமுறையாக இக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து வரும் நிலையில் இதுவரை குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால் கூட 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
தற்போது முதலமைச்சரின் உத்தரவால் முதல் முறையாக பேருந்து வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இதற்கு உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன் ஆகியோருக்கும், பேருந்தை இயக்கிய போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து நடமாடும் நியாயவிலை கடையை தொடங்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன், கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: சிறப்பு வாய்ந்த நிகழ்வாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.
மலைவாழ் மக்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார். அதில் இக்கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து வசதி என்பது முதலமைச்சரின் தலைமையிலான ஆட்சியில் ஒரு மைல்கல் என்று தான் கூற வேண்டும்.
தொட்டகொம்பைக்கு வழங்கப்பட்ட பேருந்து வசதி இக்கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும். இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு இந்த பேருந்து வசதி மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் கோபி குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் வெங்கடேஷ், பொது விநியோக திட்ட அலுவலர் சசிரேகா, போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.