சென்னை: காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: வருவாய்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர்களின் பணியிடங்களை சிறப்பு கால முறை ஊதியம் ரூ.11,100 – ரூ.35,100 என்ற ஊதியகட்டின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் வாரியாக மொத்தம் 2,299 பணியிடங்களில் காலியாக உள்ளது.
செப்டம்பர் மாதம் இறுதிக்குள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதன்படி திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 102 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் மட்டும் நிரப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பிப்போர் இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.