ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை பஞ்சாயத்து தேவர் நகருக்கு குடிநீர், சாலை, மின்சார வசதிக்கேட்டு கலெக்டரிடம் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மனு அளித்தனர். ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகர் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த ஆர்.எஸ்.மடை பஞ்சாயத்து தேவர் நகர் கிராமத்திற்கு அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள ஆர்.எஸ்,மடை பஞ்சாயத்திலுள்ள தேவர்நகர் கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் உள்ளிட்டவை சரியாக வருவதில்லை. இதனால் சாலையோரம் குழாயிலிருந்து கசியும் நீரை மணிக்கணக்கில் காத்து கிடந்து அள்ளி வருகிறோம். குடிப்பதற்கு குடிநீர் ஒரு குடம் ரூ.12 விலைக்கு வாங்கி குடிக்கிறோம். இதனை போன்று இரவு நேரத்தில் குறைந்தழுத்த மின்சாரம் வருகிறது. இதனால் மாணவர்கள் வீட்டு பாடங்களை படிக்க முடியவில்லை. வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த முடியவில்லை. மேலும் தெருச்சாலை வசதி கிடையாது. இதனால் மழை காலத்தில் சேரும், சகதியுமாக கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. மழை காலத்தில் நடந்து கூட செல்ல முடியவில்லை. எனவே தேவர் நகர் கிராமத்திற்கு குடிநீர், மின்சாரம், சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.