தொண்டாமுத்தூர், ஆக.15: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நேற்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள மலைவாழ் கிராமங்களான சாடிவயல், சிங்கம்பதி, முள்ளங்காடு மற்றும் மத்துவராயபுரம், தொம்பிலிபாளையம், ஆலந்துறை, செம்மேடு போன்ற பகுதியில் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், மத்துவராயபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த தொம்பிலிபாளையத்தில் 41 ஆண்டுகளாக சமூக சேவை செய்து வரும் நேர்டு தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.6.50 லட்சம் வரை கடன் வழங்கினார். மேலும், மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் வசிக்கும் பழங்குடியினரை வனவிலங்குகளிடம் இருந்து காத்து கொள்ள மனித- வனவிலங்கு மோதல் தவிர்ப்பு திட்டத்தின்கீழ் நேர்டு தொண்டு நிறுவனம் வழங்கும் அதிக வெளிச்சம் கொடுக்கும் டார்ச் விளக்குகளை வழங்கி தொண்டாமுத்தூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரவி வாழ்த்து தெரிவித்தார்.
இதில், நேர்டு தொண்டு நிறுவன இயக்குனர் சௌ. காமராஜ், நேர்டு தொண்டு நிறுவன தலைவர் சத்தியஜோதி, டாக்டர் காமராஜ், உழவர் உற்பத்தி நிறுவன தலைமை செயல் அதிகாரி சசிகுமார், ஆலந்துறை பேரூராட்சி தலைவி மணிமேகலை ராமமூர்த்தி, ஆலந்துறை நகரச் செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.