பாலக்காடு: கேரளதமிழக எல்லை வாளையார் அருகே ஆற்றுப்பதி கிராமத்தில் பழங்குடியினர் உட்பட ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நேற்று காலை புகுந்த சுருளிக்கொம்பன் என்ற காட்டுயானை அங்கு இங்குமாக உலா வந்து மக்களை அச்சறுத்தி வந்தது. இதுகுறித்து பொதுமக்கள், வாளையார் வனத்துறை, போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறை, காவலர்கள் டிரம் சத்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் காட்டு யானையை நீண்ட நேரம் போராடி விரட்டியடித்தனர்.
அங்கிருந்து இடம் பெயர்ந்து அருகில் உள்ள தோட்டப்பயிர்களை துவம்சம் செய்தது. இதனை கண்ட தோட்டத்தொழிலாளர்கள் தங்களது வேலைகளை பாதியிலே விட்டு அலறியடித்து ஓடி உயிர்தப்பினர்.
அப்போது வனத்துறை, காவலர்கள், பொதுமக்கள் காட்டுயானையை விரட்ட முயன்றபோது திடீரென ஆக்ரோஷமடைந்த யானை, பொது மக்களை நோக்கி ஓடிவந்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து தப்பியொடி வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்தனர்.
இருப்பினும், வனத்துறையினர் மீண்டும் சத்தம் எழுப்பி யானை விரட்டியடித்தனர்.வாளையார் அருகே ஆற்றுப்பதி கிராமப்பகுதிகளுக்குள் அடிகடி வனவிலங்கு புகுந்து விடுவதை தடுக்க வனத்துறை தகுந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.