Tuesday, February 27, 2024
Home » கிராமத்துக் கீரைகள்!

கிராமத்துக் கீரைகள்!

by Lavanya

பண்ணைக்கீரை

இதில் சட்டிப்பண்ணை, ஊசிப்பண்ணை என இரண்டு வகை உண்டு. சட்டிப்பண்ணை வெற்றிலைபோன்று அகலமான இலைகளையும், ஊசிப்பண்ணை ஊசியைப் போன்று கூர்மையானதாகவும் இருக்கும். இவை இரண்டும் கடைந்து உண்ணக் கூடிய கீரை வகைகள் ஆகும். குடலுக்கு நன்மையைக் கொடுக்கக்கூடிய இந்தக்கீரை சீதம், கரப்பான், சொறி சிரங்கு புண் இவைகளை நீக்கும். மலத்தை இளக்கச் செய்யும்.

பரங்கிக்கீரை

பரங்கி, காய்க்காக வளர்க்கப்படும் கொடி வகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதன் நுனிக் கொழுந்தைப் பிற கீரைகளுடன் துவட்டி, கலப்புக் கீரையாக உண்பர். இலையை விடவும் பரங்கிக்காயின் பட்டையும், விதையுமே மருத்துவக் குணம் நிரம்பியவை. இதன் விதை உடல் வெப்பு நீக்கியாக செயற்படும்.

பாலக்கீரை

கொடி வகையைச் சார்ந்த இக்கீரையில் இரண்டு வகை உண்டு. அவை கறிப்பாலை, ஊசிப்பாலை என்பதாகும்.
இவற்றின் பயன் தெரிந்த ஒருசிலரே சமைத்து உண்ணுகிறார்கள்.

கறிப்பாலை:

முறைப்படி சமைத்து உட்கொள்வோருக்கு வெப்பம், பித்தம், சுரம் ஆகியவை நீங்கும்.

ஊசிப்பாலை:

கண்களுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும். உடலுக்கு வலுவைக் கொடுத்து அழகாய் மிளிரச் செய்யும்.

புண்ணாக்குக் கீரை

இதன் இலை முட்டை வடிவிலும், தண்டு செந்நிறமாகவும் அமைந்திருக்கும். தரிசு நிலங்களிலும் வயல்களில் களையாகவும் வளரும். இதனைப் பருப்புடன் சமைத்து உண்ணுகின்றனர். சிறுநீர்ப் பெருக்குதல், மலமிளக்குதல் ஆகிய குணங்களை உடையது. இக்கீரையைப் பருப்பிட்டுச் சமைத்து நெய்யுடன் சோற்றில் கலந்து சாப்பிட்டு வர உடல்சூடு, வெள்ளை, சீதப்பேதி, இரத்தப் பேதி ஆகியவை தீரும். புண்ணாக்குக் கீரை. ஆவாரையிலை, விழுதியிலை ஆகியவை தலா ஒருபிடி நெல்லி, கடுக்காய் ஆகியவற்றைத் தூளாக்கி தலா 20 கிராம் கலந்து இடித்து விளக்கெண்ணெயில் சிவக்க வதக்கித் துணியில் முடிந்து ஒத்தடம் கொடுத்து, அதை வைத்துக்கட்ட ஆறு நாட்களில் முழங்கால் வாதம், வீக்கம் ஆகியவை தீரும்.

புளிச்சக் கீரை

மற்ற கீரைகளிலிருந்து பல்வேறு விதங்களில் இக்கீரை வேறுபட்டதாகும். வீட்டுத் தோட்டங்களிலும், வயல்களில் ஊடு பயிராகவும் பயிரிடப்படுகிறது. இதில் புளிப்புச் சுவை இயற்கையிலேயே
அமைந்திருப்பதனால் சமைப்பதற்காகப் புளியோ பருப்போ சேர்ப்பதில்லை. மிளகாயைக் கிள்ளிப்போட்டு கடைந்து உண்ணுகின்றனர். கடைந்த கீரையில் சோற்றைக் கிளறி, கட்டுச்சோறாக வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்வதுண்டு. இது இரும்புச்சத்து மிக்கது. இது சூடு என நம்புகின்றனர். ஒரு சிலர் பித்தம் என்று கருதுகின்றனர். புளிச்சக்கீரையினால் வாதம், பசியின்மை, சீதளம், இரத்தப் பித்த நோய், கரப்பான் ஆகியவைகள் நீங்கும். பித்தத்தை உண்டாக்கும் என்று பதார்த்த குணபாடம் குறிப்பிடுகிறது.

பொன்னாங்கண்ணிக் கீரை

இதில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் உண்டு. பச்சைப் பொன்னாங்கண்ணியைக் கலப்புக் கீரையில் கலந்து துவட்டுகின்றனர். சாம்பார் வைத்தும் உண்ணுகின்றனர். சற்று செந்நிற பொன்னாங்கண்ணியைப் பருப்புடன் கலந்து குழம்பு வைத்தும், கூட்டு செய்தும், துவட்டியும் உண்ணுகின்றனர். நோய் தணித்து உடல் தேற்றவும், பசித்தூண்டவும், மலமிளக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு பிடி பொன்னாங்கண்ணி இலைகளை அதிகாலையில் மென்று தின்று பால் அருந்திவர உடல் குளிர்ச்சியுற்றுக் கண் நோய் பலவும் நீங்கும். பார்வைத் தெளிவுறும். சமைத்து உணவுடன் நீண்டநாள் சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

மணத்தக்காளிகீரை

இக்கீரை வீட்டுத் தோட்டங்களில் தானே வளரும் ஒரு செடி வகை ஆகும். இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துச் சாம்பார் வைத்து உண்ணலாம். புளிக்குழம்பும் வைக்கின்றனர். ஒரு சிலர் தண்ணிசாறு வைத்தும் குடிக்கின்றனர். உடல் சூட்டைத் தணிக்கும். வாய்ப்புண், வாய் வேக்காடு, குடற்புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும். வாய்ப்புண்ணிற்கு இந்த இலையின் சாற்றைத் தடவினால் குணமாகும். இதன் பழங்களைச் சிறுவர்கள் விரும்பி உண்பார்கள்.

மணலிக்கீரை

இதனைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து உண்ணுவர். சதைப் பற்றான கரண்டி போன்ற இலைகளை உடைய, தரையில் படர்ந்து வளரும் சிறுசெடி இது. இக்கீரையின் வேரும் மருத்துவப் பயனுடையவை. இந்தக் கீரையை உணவுடன் பயன்படுத்த மார்புச்சளி தீரும்.

முசு முசுக்கை

சுணையுடைய இலைகளைக் கொண்ட ஒரு கொடி வகைதான் இந்த முசு முசுக்கை. வேலிகளில் படர்ந்திருக்கும். இதனை அடைமாவுடன் சேர்த்து அடைசுட்டு உண்ணுகின்றனர். சளியைக் குணப்படுத்துவதற்காக இவ்வாறு உண்ணுகின்றனர். இதன் இலை மருத்துவ குணமுடையது. இந்த இலை கோழையகற்றும் தன்மையுடையது. சளியால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு இவ்விலைச் சாற்றைப் பிழிந்து உள்ளுக்குக் கொடுப்பார்கள். தோசை மாவுடன் அரைத்துத் தோசை செய்து சாப்பிட அல்லது வதக்கித் துவையலாய்ப் பயன்படுத்தி வர சுரம், சளி, இருமல், நீர்க்கோவை, மூக்கு ஒழுகல், முக்குப்புண், வாசனையின்மை தீரும் என மக்கள் கருதுகிறார்கள்.
– இரத்தின புகழேந்தி.

You may also like

Leave a Comment

19 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi