சென்னை: அதிமுகவில் 16 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள நிலையில், நேற்று 17 பேர் கொண்ட, அதிமுக 2வது பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை அறிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் பெயரை எடப்பாடி வெளியிட்டார்.
அதன் விவரம்: ஸ்ரீபெரும்புதூர் – ஜி.பிரேம்குமார், வேலூர் – எஸ்.பசுபதி, தர்மபுரி – டாக்டர் ஆர்.அசோகன், திருவண்ணாமலை – எம்.கலியபெருமாள், கள்ளக்குறிச்சி – இரா.குமரகுரு, திருப்பூர் – பி.அருணாச்சலம், நீலகிரி (தனி) – டி.லோகேஷ் தமிழ்செல்வன், கோவை – சிங்கை ஜி.ராமச்சந்திரன், பொள்ளாச்சி – ஏ.கார்த்திகேயன், திருச்சி – பி.கருப்பையா, பெரம்பலூர் – என்.டி.சந்திரமோகன், மயிலாடுதுறை – பி.பாபு, சிவகங்கை – பனங்குடி ஏ.சேவியர்தாஸ், தூத்துக்குடி – ஆர்.சிவசாமி வேலுமணி, நெல்லை – சிம்லா முத்துச்சோழன், கன்னியாகுமரி – பசிலியான் நசரேத், திருச்சி – கருப்பையா, புதுச்சேரி – ஜி.தமிழ்வேந்தன். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் யு.ராணி போட்டியிடுகிறார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து இருக்கிறார்கள். அதேபோல், தற்போது விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளையும் நாங்கள் சந்திப்போம். ஒன்றிய அரசு நடத்தும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளையெல்லாம் சட்டரீதியாக சந்திப்போம். பெண்களுக்கு குறைவான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். எங்கள் ஆட்சி மன்ற குழு பரிசீலித்து, முடிவு செய்த வேட்பாளர்களைத்தான் அறிவித்துள்ளோம். சூழ்நிலைக்கு தக்கவாறு கட்சியின் தலைமை முடிவு எடுத்துள்ளது. என்னிடம் சாதி பற்றியோ, மதத்தின் அடிப்படையிலோ கேள்வி கேட்காதீர்கள். அதிமுக அதற்கு அப்பாற்பட்டது. தேர்தல் அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும். திருச்சியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (24ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* எடப்பாடி திடீர் கோபம்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று சொல்கிறீர்கள், அப்படியென்றால் பாஜ கூட்டணிதான் ஆட்சிக்கு வருமா என்று நிருபர்கள் கேட்டபோது… \”நீங்கள் இப்படி கேள்வி கேட்டா என்ன அர்த்தம். நாங்கள் யார் வெற்றி பெறுவார்கள் என்றா தீர்ப்பு கூறிக்கொண்டு இருக்கிறோம். இந்த கேள்வி தவறான கேள்வி. நீங்கள் கேட்கும் கேள்வி கிண்டலான கேள்வியாக இருக்கிறது. அது தப்பு. அதிமுக பலம்வாய்ந்த கட்சி. புரிந்து கொள்ளுங்கள். அடுத்தமுறை வரும்போது நீங்கள் கேள்வி கேட்க மாட்டீங்க. அதிமுகவின் வலிமையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்\” என்று கோபத்துடன் பேசினார்.
* ஒரே ஒரு பெண் வேட்பாளர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் நெல்லை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாக கொண்ட இவர், பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவர் திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் ஆவார்.