Thursday, July 25, 2024
Home » விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

by Karthik Yash

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக அரசு ஏராளமான நலத்திட்டங்கள் செய்துள்ளது அத் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், திராவிடமாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் சிறப்பாக நடத்தி வருகிறார். மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் சீராக வளர்ச்சி பெற்றால் தான் உடல் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக அமையும். அதுபோல தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஒவ்வொரு மாவட்டத்தின் வளர்ச்சியுடன் கட்டுக்கோப்பாக இணைந்து அமைந்திட வேண்டும்.

அப்போதுதான் எல்லோர்க்கும் சீராக எல்லாம் கிடைத்து, எல்லோரும் முன்னேற்றம் காண முடியும். இதன் அடிப்படையில் எல்லா மாவட்டங்களிலும் அரசின் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்திலும் இந்த ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் அனைத்து நிலைகளிலும் சென்று சேர்ந்துள்ளன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டி தொகுதியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வி பயின்று வருகின்றனர். முதல்வரின் முகவரி திட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 223 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 24,356 மனுக்களுக்கும், விக்கிரவாண்டியில் 21,093 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 29 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு, 7 ஆயிரத்து 750 பெண் தன்னார்வலர்கள் மூலம் கல்விப் பணிகள் நடந்து வருகின்றன. விக்கிரவாண்டியில் 328 மாணவ மாணவியர் 83 தன்னார்வலர்கள் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத் திட்டத்தில் 6 கோடியே 92 லட்சத்து 89,206 முறையும், விக்கிரவாண்டியில் 3 கோடியே 89 லட்சத்து 96 ஆயிரத்து 648 முறையும் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3 லட்சத்து 49,257 குடும்பத் தலைவிகளும், விக்கிரவாண்டியில் 53,375 குடும்பத் தலைவிகளும் மாதம் ரூ.1,000 பெற்று மகிழ்கின்றனர். 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடித் திட்டத்தில் 90.13 கோடி ரூபாய் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 20,799 குடும்பங்களும், விக்கிரவாண்டியில் ரூ.8.50 கோடி ரூபாய் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,633 குடும்பங்களும் பயனடைந்துள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5 லட்சத்து 34,136 பேரும், விக்கிரவாண்டியில் 80,929 பேரும் பயன் பெற்றுள்ளனர்.

“இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48” திட்டத்தில், 2,995 பேருக்கு 1.84 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரவாண்டியில் 11.55 லட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
6,119 விவசாயிகளின் பம்ப் செட்களுக்கும், விக்கிரவாண்டியில் 16.76 கோடி ரூபாய் செலவில் 901 விவசாயிகளின் பம்ப்செட்களுக்கும் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தில் 78 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 16 நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, 61,283 பேர் பயனடைந்துள்ளனர். விக்கிரவாண்டியில் 6 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 4,621 பேர் பயனடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் 1,624 மகளிர் சுயஉதவிக் குழுக்களில், 16 ஆயிரத்து 128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் சுயதொழில் தொடங்கிட கடன் உதவி ரூ.1,388.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 43 ஆயிரத்து 33 பயனாளிகளுக்கு ரூ. 314 கோடியும், விக்கிரவாண்டி தொகுதியில் 15 ஆயிரத்து 415 பயனாளிகளுக்கு ரூ. 6.28 கோடியும் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 158 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.55 கோடி, விக்கிரவாண்டியில் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 785 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.38 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சமூகநலத் துறையின் சார்பில் பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ், 10ம் வகுப்பு படித்த 1,696 ஏழைப் பெண்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.4.24 கோடி திருமண நிதியுதவியும், ரூ.6.10 கோடி மதிப்பிலான 13.568 கிலோ கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2,085 ஏழைப் பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.10.42 கோடி திருமண நிதியுதவியும், ரூ.7.50 கோடி மதிப்பிலான 16.680 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் சேர்ந்த 9 ஆயிரத்து 488 மாணவிகளும், விக்கிரவாண்டியில் 738 மாணவிகளும் மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் பள்ளிக்கல்வித் துறை மூலம் 19,589 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா சீருடைகள், 10,627 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா காலணிகள், 31,295 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா புத்தகப் பைகள், 5842 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா அட்லஸ்கள், 3,610 மாணவியர்க்கு விலையில்லா கிரையான்கள், 5,963 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகளும், 7,017 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா வண்ண பென்சில்கள், 15,140 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா பூட்ஸ்கள், 15,140 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா காலுறைகள் வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் 7,600 குடும்பங்களுக்கும், விக்கிரவாண்டி தொகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 1,354 வேளாண் குடும்பங்களுக்கும் வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்டு சிறந்த மாநிலமாகத் திகழ்வது போல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டமும் முன்னேற்றத் திசையில் நடைபோட்டு வருகிறது. இதில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

* 3,49,257 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை
* சுயதொழில் தொடங்க ரூ.1,388 கோடி கடனுதவி
* முதல்வரின் முகவரி திட்டத்தில் 1,24,356 மனுக்களுக்கு தீர்வு
* 20,799 குடும்பங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி ரூ.90.13 கோடி
* புதுமைப்பெண் திட்டத்தில் 9,488 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்

You may also like

Leave a Comment

5 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi