விழுப்புரம்: விக்கிரவாண்டியில் செப்.23ம் தேதி நடிகர் விஜய் கட்சி முதல் மாநாடு நடத்த அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் இடம் பார்க்கப்பட்ட நிலையில், இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாநாட்டிற்கு அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரியும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று எஸ்பி அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், ‘எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் 23.9.2024 அன்று நடத்துவதாக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார். மாநாடு நடத்துவதற்காக சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு பெற்றுள்ளோம்.
எங்கள் மாநாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தையும் முறையாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். மாநாட்டிற்கு காவல்துறை தரப்பிலிருந்து கொடுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் மாநாட்டை முறையாக நடத்துவோம். எனவே, மாநாட்டிற்கு தேவையான முழுபாதுகாப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏடிஎஸ்பி திருமால், டிஎஸ்பி சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை மாநாடு நடக்க உள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.