விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வருகிற 23ம் தேதி நடிகர் விஜய் கட்சி நடத்தும் மாநாடு குறித்து 21 கேள்விகளை கேட்டு அக்கட்சி பொதுச்செயலாளருக்கு காவல்துறை கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் அனுமதி கேட்டால் அது ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும், அனுமதி அளிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு சில நிபந்தனைகளை விதிப்பதும், முன்னதாக அவர்களிடம் உத்தரவாதங்கள் வாங்குவதற்காக கேள்விகள் கேட்பதும் வழக்கம்.
ஏனெனில், அனுமதி பெற்ற பிறகு, போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்படலாம், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்பதற்காக போலீசார் அவ்வாறு கேள்விகள் கேட்டு, கூட்டம் நடத்தும் நிர்வாகிகளிடம் விளக்கம் பெறுவது வழக்கம். அதேபோல தற்போது நடிகர் விஜய் நடத்தும் கூட்டத்திற்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 23ம்தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனுமதி கோரி கடந்த 28ம்தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அன்றே மாநாடு நடைபெற உள்ள இடத்தை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாநாடு நடத்த தேர்வு செய்துள்ள இடம் தேசிய நெடுஞ்சாலைக்கும், ரயில் பாதைக்கும் இடைப்பட்ட பகுதி என்பதோடு, இப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட ஆழமான கிணறுகளை மூடவேண்டும். சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வர வாய்ப்புள்ளதால் வாகனங்களை நிறுத்துவதற்கு 71 ஏக்கர் நிலமும் தயார் செய்யப்படுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென காவல்துறையிடம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு, விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், சுமார் 21 கேள்விகளை பட்டியலிட்டு, அவற்றுக்கு 5 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். அதில், மாநாடு எந்த நேரம் தொடங்கி எப்போது முடிக்கப்படும். நிகழ்ச்சி நிரல்கள் விவரம், மாநாடு நடத்த தேர்வு செய்துள்ள இடத்தின் உரிமையாளர்கள் யார், அவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?, பங்கேற்கும் முக்கிய நபர்கள் பட்டியல், பேசுபவர்களின் விவரம், கலந்து கொள்பவர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன என தெரிவிக்க வேண்டும்.
மேலும் மாநாட்டில் வைக்கப்பட உள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விவரம், மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விவரம், மாநாட்டில் பங்கேற்கும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம், இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் எண்ணிக்கை விவரம், வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடு, குடிநீர்- கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் விவரம், உணவு விநியோகம், தீவிபத்து பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், கட்சித் தலைவர், விஐபிக்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம், மின்சார அனுமதி உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளது. இந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தவெக விளக்கம் அளித்த பின் மாநாட்டுக்கான அனுமதி அளிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது தெரிய வரும். அனுமதி பெற்ற பிறகு போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்படலாம், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்பதால் போலீசார் கேள்விகள் கேட்டு விளக்கம் பெறுவது வழக்கம்.